நடுவானில் பாதையை மாற்றும் குறுகிய தூர பிரலே ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்த DRDO..
ஒடிசாவில் உள்ள ஏபிஜே அப்துல்கலாம் தீவில் குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணையான ‘பிரலே’ ஏவுகணையை DRDO வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இந்த ஏவுகணை இன்று காலை 10:30 மணி அளவில் சோதனை செய்யப்பட்டுள்ளதாக DRDO தெரிவித்துள்ளது.
பிரலேவின் (Surface-to-Surface Conventional ballistic Missile) முதல் சோதனை வெற்றி அடைந்துள்ளது. இந்த ஏவுகணை நடுவானில் தனது பதையை மாற்றி செல்லும் திறன் கொண்டது. இடைமறிக்கும் ஏவுகணைகளை முறியடிக்கும் வகையில் இந்த ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது. ஏவுகணை அதன் அனைத்து நோக்கங்களையும் பூர்த்தி செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த பிரலே ஏவுகணை அதன் இலக்கை துல்லியமாக தாக்கி அழித்துள்ளது. இந்த ஏவுகணை 350-500 கி.மீ குறுகிய தூர ஏவுகணை. 500 முதல் 1,000 கிலோ வெடிபொருட்களை சுமந்து செல்லக்கூடியது. இந்த திட்டத்திற்கு 332 கோடி மதிப்பில் 2015 ஆம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டு தற்போது முதல் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.
Also Read: இந்தியா வந்தடைந்தது S-400 ஏவுகணை அமைப்பு..? பஞ்சாபில் நிலைநிறுத்த திட்டம்..?
இவற்றை எங்கு வேண்டுமானாலும் எடுத்து சென்று மொபைல் லாஞ்சரில் இருந்து ஏவ முடியும். ஏவுகணை வழிகாட்டுதல் அமைப்பில் அதிநவீன வழிசெலுத்தல் அமைப்பு மற்றும் ஒருங்கிணைந்த ஏவியோனிக்ஸ் ஆகியவை உள்ளன. SRBM வகையை சேர்ந்த இந்த ஏவுகணை 5,000 கிலோ எடை கொண்டது. மேக் 1.6 வேகத்தில் பயணிக்க கூடியது.
Also Read: அணு சக்தி திறன் கொண்ட அக்னி பிரைம் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்த DRDO..
இலக்கில் இருந்து 10 மீட்டருக்குள் தாக்குதல் நடத்த கூடிய துல்லியமான ஏவுகணை ஆகும். இடைமறிக்கும் ஏவுகணைகளிடம் சூழ்ச்சி செய்து நடுவானில் தனது பாதையை மாற்றி தனது இலக்கை நோக்கி பயணிக்கும். அரை பாலிஸ்டிக் பாதையை பின்பற்றி வழிகாட்டு அமைப்பு மற்றும் பணி வழிமுறைகளுடன் நியமிக்கப்பட்ட இலக்கை ஏவுகணை அடைந்ததாக DRDO தெரிவித்துள்ளது.
ஏவுகணையின் முதல் சோதனை வெற்றியை தொடர்ந்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், DRDO மற்றும் அதனுடன் தொடர்புடைய குழுக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். DRDO தலைவர் சதீஷ் ரெட்டி, தனது குழுவை பாராட்டினார். மேலும் இது நவீன தொழிற்நுட்பங்களுடன் கூடிய புதிய தலைமுறை ஏவுகணை எனவும், இந்த ஆயுத அமைப்பு இந்திய இராணுவத்திற்கு தேவையான ஒன்று எனவும் குறிப்பிட்டார்.