வான் இலக்குகளை தாக்கி அழிக்கும் ஆகாஷ்-NG ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது DRDO
அடுத்த தலைமுறை ஏவுகணையான ஆகாஷ் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது
தற்போது நடைபெற்று வரும் ஏவுகணை (Surface to Air Missile or SAM) திட்டத்தின் ஒரு முக்கிய மைல்கல்லாகும். இந்தியா திங்கட்கிழமை ஒடிசா கடற்கரையில் உள்ள பாதுகாப்பு மையத்தில் இருந்து “ஆகாஷ்-நெக்ஸ்ட் ஜெனரேஷன்” (Akash-NG) முதல் சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.
ஒருங்கிணைந்த சோதனை ஏவுதளம் – 3 ல் உள்ள மொபைல் பிளாட்பார்மில் இருந்து இந்த ஏவுகணை இன்று மதியம் 2.30 மணிக்கு மின்னணு இலக்கை நோக்கி ஏவப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
அனைத்து இலக்குகளையும் தாக்கியதாகவும், ஏவுகணை அமைப்பு எதிர்பார்த்தபடி செயல்பட்டதாகவும் புது தில்லியைச் சேர்ந்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். “இந்த ஏவுகணை 100 சதவீதம் வெற்றிகரமாக இருந்தது. இந்த ஏவுகணை இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பை கணிசமாக அதிகரிக்கும்” என்று அவர் கூறினார்.
இதற்கு முன் ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடைபெற்ற சில நாட்களில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை குழு நட்பு நாடுகளுக்கு ஆகாஷ் ஏவுகணை அமைப்புகளை ஏற்றுமதி செய்ய ஒப்புதல் அளித்த சில நாட்களுக்குப் பிறகு, இந்த சோதனை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
டி.ஆர்.டி.ஓ.வால் உருவாக்கப்பட்ட இந்த ஆயுத அமைப்பு ஒரே நேரத்தில் பல இலக்குகளை தாக்கும். க்ரூஸ் ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் போர் விமானங்கள் போன்ற பல இலக்குகளை அழிக்கமுடியும்.
சூப்பர்சோனிக் வேகத்தில் பறக்கும் இது சப்சோனிக் மற்றும் சூப்பர்சோனிக் இலக்குகளையும் அழிக்கும் திறன் கொண்டது. புதிய ஆகாஷ் அமைப்பு மற்ற ஏவுகணையுடன் ஒப்பிடுகையில் இது ஒரே நேரத்தில் 10 இலக்குகளை தாக்கி அழிக்கும்.
முந்தைய ஆகாஷ் ஏவுகணை அதிகபட்சமாக 20 கி.மீ உயரம் வரை பயணித்து, 30 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும். ஆனால் ஆகாஷ்-NG 50 கி.மீ உயரம் வரை சென்று, 70 கிமீ தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும்.
புதிய அமைப்பு ஒரே தளத்தில் 3 செயல்பாடுகளை(Search, Track and Fire control) கொண்டுள்ளது.
ஆகாஷ் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட மற்றும் தயாரிக்கப்பட்ட வான் பாதுகாப்பு அமைப்பு ஆகும். உலகிலேயே சக்தி வாய்ந்த மிகவும் மலிவான வான் ஏவுகணை ஆகும்.
வழிகாட்டும் அமைப்பு, பல இலக்குகளை கையாளும் அம்சங்கள், தானியங்கி வான் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவை இதன் சிறப்பம்சம் ஆகும்.
ஆகாஷ்-NG திட்டத்திற்கு 2016ல் ஒப்புதல் வழங்கப்பட்டு, 500 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.