உங்கள் வாழ்க்கையை கெடுத்து கொள்ளாதீர்கள்.. தொழுகைக்கு பிறகு யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம்: இஸ்லாமிய அமைப்பு வேண்டுகோள்

பாஜகவின் முன்னாள செய்தி தொடர்பாளர் நூபுர் சர்மா மீது நடவடிக்கை எடுக்ககோரி, கடந்த வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகைக்கு பிறகு இஸ்லாமியர்களால் பல்வேறு மாநிலங்களில் வன்முறை வெடித்தது. இந்த நிலையில் இன்று நடைபெறும் தொழுகைக்கு பிறகு இஸ்லாமியர்கள் யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என இஸ்லாமிய அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

கடந்த ஜுன் 3 மற்றும் 10 ஆகிய இரண்டு வெள்ளிக்கிழமைகளில் நூபுர் சர்மா மீது நடவடிக்கை எடுக்ககோரி பல்வேறு நகரங்களில் வன்முறை வெடித்தது. போராட்டகாரர்கள் போலிஸ் மற்றும் பொதுமக்கள் மீது கற்களை கொண்டு வீசியதால் போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் போலிசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.

டெல்லி ஜமா மஸ்ஜித் இமாம் சையது அகமது புகாரி கூறுகையில், நாட்டில் கலவரம் செய்ய நினைக்கும் சமூக விரோதிகளை மக்கள் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். கடந்த வாரத்தில் வன்முறை போரட்டங்கள் நடந்திருக்க கூடாது. மக்கள் போராட்டம் நடத்தும் முன் காவல்துறை மற்றும் நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும். இது எதிர்ப்பை பதிவு செய்வதற்கான வழி அல்ல. அதனை அமைதியான வழியில் செய்ய வேண்டும்.

போராட்டங்களில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை சேர்த்தது தவறு. போராட்டகாரர்கள் கற்களை கொண்டு வீசியதால் போலிசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் 2 பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்துள்ளனர் மற்றும் பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் ஏழைகள். அவர்களிடம் ஜாமீன் வாங்க கூட பணம் இல்லை.

மும்பையை சேர்ந்த அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரிய உறுப்பினர் (AIMPLB) மௌலானா சையத் அதர் அலி கூறுகையில், இப்போது நிலமைகள் சரியாக இல்லை, இப்போது வீதிக்கு வந்தால் ஒரு சில சமூக விரோதிகள் சில வன்முறைகளை தூண்டி அதனை பரப்ப வாய்ப்புள்ளது. நாளை (இன்று) வெள்ளிக்கிழமை அந்த வரலாறு மீண்டும் வருவதை நாங்கள் விரும்பவில்லை.

நான் மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். முஸ்லிம் சமுகம் எந்த எதிர்ப்பை பதிவு செய்ய விரும்பினாலும், நமது விஷயங்களை சரியான தளத்தில் வைக்க AIMPLB உட்பட ஏராளமான அமைப்புகள் உள்ளன. மக்கள் அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். அவர்களின் முயற்சிகளை பாராட்டி அவர்களுடன் ஒத்துழைக்க வேண்டும். நாம் வீதிக்கு வர கூடாது. இந்த சூழ்நிலையில் வீதிக்கு வருவது மிகவும் ஆபத்தானது.

சில சமூக விரோதிகள் நாங்கள் வீதிக்கு வருவதற்கு காத்திருக்கிறார்கள் என கூறியுள்ளார். பிரயாக்ராஜில் உள்ள ஜமா மசூதியின் மௌலானா காரி முஃப்தி அகமது மத்தின் காஸ்மி கூறுகையில், நாளை(இன்று) வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பிறகு வன்முறையில் ஈடுபட வேண்டாம். எந்த சதியிலும் விழ வேண்டாம். அனைவரும் நிர்வாகத்துடன் ஒத்துழைக்க வேண்டும் மற்றும் சட்டத்திற்குள் கீழ்படிய வேண்டும்.

அனைத்து பெற்றோர்களும் பொறுப்பேற்று தங்கள் குழந்தைகள் தேவையற்ற சட்டவிரோத அல்லது ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபடாமல் பார்த்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எதிர்காலத்தை பற்றி சிந்தியுங்கள், உங்கள் சொந்த செயல்களால் உங்கள் எதிர்காலத்தை கெடுத்து கொள்ளாதீர்கள் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.