ஆறாவது முறையாக வைரம்.. விவசாயிக்கு அடித்தது அதிர்ஷ்டம்..!

அரசிடம் இருந்து குத்தகைக்கு எடுத்த நிலத்தில் விவசாயி ஒருவர் ஆறாவது முறையாக வைரத்தை சுரங்கத்தில் இருந்து கண்டுபிடித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தின் பன்னா மாவட்டத்தில் மட்டும் 12 லட்சம் கேரட் உள்ளதாக கூறப்படுகிறது.

வைரம் இருப்பதாக கூறப்படும் நிலங்களை அரசு உள்ளூர் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு குத்தகைக்கு விடுகிறது. இந்த நிலையில் பன்னா மாவட்டம் ஜருபூர் கிராமத்தில் உள்ள ஒரு சுரங்கத்தில் விவசாயி பிரகாஷ் மஜூம்தார் என்பவர் 6.46 கேரட் எடையுள்ள வைரத்தை கண்டுபிடித்துள்ளார்.

விவசாயி பிரகாஷ் மஜூம்தார் கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் 2 மற்றும் 2.5 கேரட் எடையுள்ள நான்கு வைரங்களை எடுத்துள்ளார். மேலும் 7.4 கேரட் எடையுள்ள ஒரு வைரத்தையும் எடுத்துள்ளார். தற்போது ஆறாவது முறையாக 6.46 கேரட் எடையுள்ள வைரத்தை எடுத்துள்ளார்.

இந்த வைரத்தை அரசு வைர அலுவலகத்தில் டெபாசிட் செய்துள்ளனர். வரும் ஏலத்தில் இந்த வைரம் ஏலம் விடப்பட்டு அரசு ராயல்டி மற்றும் வரி போக மீத தொகை விவசாயிடம் வழங்கப்படும்.

தனியார் நிறுவனங்களின் கணிப்பின் படி இந்த 6.46 கேரட் எடையுள்ள வைரம் 30 லட்சத்திற்கு ஏலம் போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தன்னுடன் மேலும் நான்கு பங்குதாரர்கள் உள்ளதாகவும், கிடைக்கும் வருமானத்தை நாங்கள் ஐந்து பேரும் பகிர்ந்து கொள்ள உள்ளதாகவும் விவசாயி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.