இராணுவத்திற்கு அதிகம் செலவு செய்யும் நாடுகள்.. முதல் 3 இடத்திற்குள் இந்தியா..

2021 ஆம் ஆண்டு உலக இராணுவ செலவு இதுவரை இல்லாத அளவாக 2.1 டிரில்லியன் டாலரை எட்டியுள்ளதாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) கூறியுள்ளது. அதில் முதல் மூன்று இடங்களில் அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா உள்ளதாக திங்கள் கிழமை SIPRI அறிக்கை வெளியிட்டுள்ளது.

மொத்த உலகளாவிய இராணுவ செலவீனம் 2021 ல் 0.7 சதவீதம் உயர்ந்து 2.1 டிரில்லியன் டாலரை எட்டியுள்ளது. 2021 ல் இராணுவத்திற்கு அதிகமாக செலவிட்ட நாடுகளின் முதல் ஐந்து இடங்களில் அமெரிக்கா, சீனா, இந்தியா, இங்கிலாந்து மற்றும் ரஷ்யா உள்ளது.

மொத்த உலகளாவிய செலவீனத்தில் இந்த 5 நாடுகள் மட்டும் 62 சதவீத பங்குகளை கொண்டுள்ளன. கொரோனா தொற்றினால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்த போதிலும் இராணுவ செலவு அதிகரித்துள்ளதாக SIPRI ன் மூத்த ஆராய்ச்சியாளர் டாக்டர் டியாகோ லோப்ஸ் டா சில்வா கூறியுள்ளார்.

முதல் இடத்தில் உள்ள அமெரிக்கா 2021 ஆம் ஆண்டு 801 பில்லியன் டாலர்களை இராணுவத்திற்காக செலவழித்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 1.4 சதவீதம் குறைந்துள்ளது. இருப்பினும் 2012 மற்றும் 2021 ஆம் ஆண்டிற்கு இடையில் இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான அமெரிக்க நிதியுதவி 24 சதவீதம் உயர்ந்துள்ளது.

இரண்டாவது இடத்தில் உள்ள சீனா 2021 ஆம் ஆண்டில் 293 பில்லியன் டாலர்களை இராணுவத்திற்கு செலவழித்துள்ளது. 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 4.7 சதவீதம் அதிகமாகும். சீனாவின் இராணுவ செலவு 27 ஆண்டுகளாக தொடர்ந்து உயர்ந்து வருவதாக SIPRI கூறியுள்ளது.

Also Read: ரஷ்ய ஹெலிகாப்டருடன் இஸ்ரேலிய NLOS ATGMs ஏவுகணையை இணைக்கும் இந்திய விமானப்படை..

மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியா 2021 ல் 76.6 பில்லியன் டாலர்களை இராணுவத்திற்கு செலவழித்துள்ளது. 2020 ஆம் ஆண்டை விட இந்தியாவின் இராணுவ செலவு 2021 ல் 0.9 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இராணுவ பட்ஜெட்டில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை கொள்முதல் செய்ய 64 சதவீதம் ஒதுக்கியுள்ளது. 2012 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவின் இராணுவ செலவு 33 சதவீதம் அதிகரித்துள்ளது.

நான்காவது இடத்தில் உள்ள இங்கிலாந்து 2021ல் 68.4 பில்லியன் டாலர்களை இராணுவத்திற்காக செலவிட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 3 சதவீதம் அதிகமாகும். இந்த பட்டியலில் ரஷ்யா ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. 2021ல் ரஷ்யா இராணுவத்திற்கு 65.9 பில்லியன் டாலரை செலவிட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 2.9 சதவீதம் அதிகமாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ரஷ்யாவின் இராணுவ செலவு 4.1 சதவீதம் ஆகும்.

Also Read: இந்திய விமானப்படைக்கு மேலும் 114 மல்டி ரோல் போர் விமானங்கள்..? உள்நாட்டில் தயாரிக்க முடிவு..

எரிசக்தி விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் ரஷ்யாவின் இராணுவ செலவீனங்களை அதிகரிக்க உதவியுள்ளது. அதேபோல் 2021ல் ஜப்பான் 7.0 பில்லியன் டாலரை அதிகரித்து 54.1 பில்லியன் டாலர் இராணுவத்திற்காக செலவு செய்துள்ளது. ஆஸ்திரேலியாவின் இராணுவ செலவும் 2021ல் 4 சதவீதம் அதிகரித்து 31.8 பில்லியன் டாலராக உள்ளது. ஈரான் 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 14 சதவீதம் அதிகரித்து 2021ல் 24.6 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.