இந்திய பெருங்கடலில் சீன உளவுக்கப்பல்.. ஏவுகணை சோதனையை நிறுத்திய DRDO..?

இந்திய பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்த சீன ஆராய்ச்சி கப்பலை உன்னிப்பாக கவனித்து வருவதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் சீனாவின் யுவான் வாங் 5 என்ற உளவு கப்பல் இலங்கையின் ஹம்பந்தோட்டா துறைமுகத்திற்கு வந்த நிலையில், தற்போது மூன்று மாதங்களுக்கு பிறகு யுவான் வாங் 6 என்ற சீன விண்வெளி ஆராய்ச்சி கப்பல் இந்திய பெருங்கடல் பகுதிக்குள் துழைந்துள்ளது.

மேம்பட்ட கண்காணிப்பு கருவிகள் மற்றும் சென்சார்கள் பொருத்தப்பட்ட சீன உளவுகப்பல் பாலிஸ்டிக் ஏவுகணைகள், செயற்கைகோள்களை கண்காணிப்பது மற்றும் சிக்னல் நுண்ணறிவு சேகரிக்கும் திறன் கொண்டது.

DRDO நவம்பர் 10 மற்றும் 11 க்கு இடையில் நீர்மூழ்கி கப்பலில் இருந்து 2,200 கிலோமீட்டர் தூரம் செல்லும் K-4 பாலிஸ்டிக் ஏவுகணை (SLBM) மற்றும் அக்னி ஏவுகணையை சோதனை செய்ய உள்ளது. இந்த நிலையில் நவம்பர் 15-20 ஆம் தேதிகளில் நடைபெறும் விண்வெளி ஆய்வுக்காக சீனாவின் யுவான் வாங் 6 ஆராய்ச்சி கப்பல் வங்காள விரிகுடாவிற்கு வருகிறது.

சீன உளவுகப்பல் வங்காள விரிகுடாவிற்கு வருவதால் DRDO ஏவுகணை சோதனையை தற்காலிகமாக ஒத்திவைக்கலாம் என கூறப்படுகிறது. இந்திய பெருங்கடலுக்கு சீன உளவு கப்பலை அனுப்புவதற்கு விண்வெளி ஆராய்ச்சி ஒரு காரணமாக கூறப்பட்டாலும், ஏவுகணை சோதனையை கண்காணிப்பதற்காகவே இந்திய பெருங்கடலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் ஒரே செயல்பாட்டு பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கி கப்பலான INS அரிஹ்ந்த், K-12 SLBMகளை கொண்டுள்ளது. இந்த K-12 வங்காள விரிகுடாவில் இருந்து 750 கிலோமீட்டர் தூரம் வரை மட்டுமே செல்லக்கூடியது. ஆனால் தற்போது சோதனை செய்யப்பட உள்ள K-4 SLBM ஏவுகணை 3,500 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்குதல் நடத்தக்கூடியது.

கப்பல் இயக்கம் குறித்த தகவல்களை வழங்கும் மரைன் ட்ராபிக் அறிக்கையின்படி, கடைசியாக இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு அருகில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் சீனாவின் யுவான் வாங் 6 உளவு கப்பல் இலங்கை துறைமுகத்தில் நிறுத்தவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.