இந்திய எல்லை அருகே ஊடுருவிய சீன போர் விமானம்.. இந்திய விமானப்படை பதிலடி..

சீன போர் விமானம் ஒன்று ஜூன் கடைசி வாரத்தில் கிழக்கு லடாக் செக்டார் பகுதியில் உண்மையான கட்டுப்பாட்டு கோட்டிற்கு மிக அருகில் வந்ததாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் இறுதியில் கிழக்கு லடாக் பகுதியில் கட்டுப்பாட்டு கோட்டிற்கு அருகே சீன விமானப்படையின் போர் விமானம் ஒன்று பறந்த நிலையில் இந்திய விமானப்படையின் எதிர்ப்பை அடுத்து சீன போர் விமானம் பின்வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அதிகாலை 4 மணி அளவில் நடைபெற்றுள்ளது.

சீன போர் விமானம் ஊடுருவியதை தரையில் இருந்தும் மற்றும் எல்லைப்பகுதியில் பயன்படுத்தப்பட்ட உள்நாட்டு ரேடார்களிலும் கண்டறியப்பட்டுள்ளது. கிழக்கு லடாக் செக்டார் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சீனா தற்போது அதன் போர் விமானங்கள் மற்றும் S-400 வான் பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட ஆயுதங்கள் மூலம் போர் பயிற்சிகளை நடத்த உள்ள நிலையில் இந்த அத்துமீறல் நடைபெற்றுள்ளது.

சீனா ஏற்கனவே அதிக எண்ணிக்கையிலான போர் விமானங்கள் மற்றும் ஆளில்லா விமானங்களை இந்திய எல்லைக்கு அருகே நிலைநிறுத்தியுள்ளது. ஏற்கனவே கடந்த 2020 ஆம் ஆண்டு இந்த பகுதியில் இந்திய மற்றும் சீன வீரர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. இந்த மோதலில் சீனாவுக்கு பெரிய அளவிலான உயிரிழப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் ஜூன் மாதம் சீன போர் விமானம் ஊடுருவியது தொடர்பாக சீனாவிடம் கூறப்பட்டதாகவும், அதன் பிறகு எவ்வித அசம்பாவிதமும் நடைபெறவில்லை என இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்திய இராவத்தில் லடாக் செக்டாரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் வடக்கு படைக்கு சீன தரப்பில் இருந்து வரும் அச்சுறுத்தல்களை சமாளிக்க அனைத்து விதமான துப்பாக்கி மற்றும் ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் இந்திய விமானப்படை தரப்பிலும் ரபேல் உள்ளிட்ட போர் விமானங்கள் எல்லையோரம் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இரு நாடுகளும் எல்லையோரம் உள்கட்டமைப்பை கடந்த சில ஆண்டுகளாக மேம்படுத்தி வருகின்றன. சீனா கடந்த இரண்டு ஆண்டுகளாக எல்லைக்கு அருகில் உள்ள ஹோடான் மற்றும் கார் குன்சா ஆகிய விமான நிலையங்களை மேம்படுத்தி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.