உலக நாடுகளை உளவு பார்க்க 13,000 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த உள்ள சீனா..?

உலகம் முழுவதும் இணைய சேவைகளை வழங்குவதற்காக சீனா 13,000 செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. இந்த மெகாகான்ஸ்டெலேஷன் பூமியை கீழ் சுற்றுபாதையில் சுற்றி வரும் என கூறப்பட்டுள்ளது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

மெகாகான்ஸ்டெலேஷன் என்பது இணைய சேவைகளை வழங்குவதற்காக பூமியின் நீளம் மற்றும் அகலத்தை உள்ளடக்கிய ஆயிரக்கணக்கான செயற்கைகோள்களின் வலையமைப்பாகும். எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்லிங்க் நிறுவனம் இதில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. தற்போது அந்த நிறுவனத்திற்கு கிட்டதட்ட 2,000 செயற்கைகோள்கள் செயல்பாட்டில் உள்ளன.

சீனாவின் அறிவியல், தொழிற்நுட்பம் மற்றும் தேசிய பாதுகாப்புக்கான தொழில் நிர்வாகம் (SASTIND) செயற்கைகோள்களை உருவாக்குவதற்கு அழைப்பு விடுத்துள்ளது. பூமியின் கீழ் சுற்றுவட்டபாதையில் மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதே இந்த பணியின் முக்கிய நோக்கம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சைனா ஏரோஸ்பேஸ் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கார்ப்பரேஷனின் மூத்த அதிகாரி பாவோ வெய்மின் கூறுகையில், நாங்கள் விண்வெளி அடிப்படையிலான இணைய செயற்கைகோள்களை உருவாக்கி வருகிறோம். மேலும் சோதனை செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தியுள்ளோம் என கூறினார்.

இந்த செயற்கைகோள் திட்டம் பற்றிய தகவல்கள் தெளிவாக கூறப்படவில்லை என்றாலும், 5ஜி நெட்வொர்க் சேவையை வலுபடுத்த, தகவல்தொடர்பு மற்றும் கிராமப்புறங்களில் உள்ள இடைவெளிகளை குறைப்பதே இதன் நோக்கம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் செயற்கைகோள்களை போலவே சீனாவின் 12,992 செயற்கைகோள்கள் பூமியின் கீழ் சுற்றுபாதையில் சுற்றும். இவற்றின் வீச்சு பூமியின் மேற்பரப்பில் இருந்து 498.89 கிலோமீட்டர் முதல் 1144.24 கிலோமீட்டர் வரை இருக்கும் என கூறப்படுகிறது.

இருப்பினும் சீனாவின் இந்த திட்டத்தை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தங்களை உளவு பார்ப்பதற்காக போடும் திட்டம் என குற்றம் சாட்டி உள்ளன. ஏற்கனவே சீனா கோபென் என்ற இரண்டு புவி கண்காணிப்பு செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி பூமியின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.