உலகம் முழுவதும் சட்டவிரோத காவல் நிலையங்களை தொடர்ந்து நீதிமன்றங்களை நிறுவி வரும் சீனா..!

உலகம் முழுவதும் சட்டவிரோத காவல்நிலையங்களை திறந்ததாக கண்டனத்திற்கு உள்ளான சீனா, தற்போது பல நாடுகளில் தூதரகங்கள் மற்றும் சட்ட சேவை மையங்கள் அல்லது நீதிமன்றங்களை உருவாக்கி வருகிறது.

புலனாய்வு பத்திரிக்கையான ரிப்போர்ட்டிகா வெளியிட்டுள்ள தகவலின்படி, வெளிநாடுகளில் உள்ள சீனர்கள் மீது செல்வாக்கு செலுத்தவும், சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரான கருத்துகளை நசுக்கவும், அந்தந்த நாடுகளில் அரசியலில் தலையிடவும் இது போன்ற தூதரகங்கள் மற்றும் நீதிமன்றங்களை உருவாக்கி வருகிறது.

அக்டோபர் 16 அன்று இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள சீன துணை தூதரக வளாகத்திற்குள் ஹாங்காங் ஜனநாயக சார்பு எதிர்ப்பாளர் இழுத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டதை பத்திரிக்கை மேற்கோள்காட்டியுள்ளது. இந்த சம்பவம் இங்கிலாந்து அரசாங்கத்தை எட்டிய நிலையில், போலிசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

சீன தூதரகங்கள் சர்ச்சையில் சிக்குவது இது முதல்முறை அல்ல. இதற்கு முன் 2021 ஆம் ஆண்டு, உய்கூர் இஸ்லாம் பெண்களை குறிப்பிட்டு, அவர்கள் “குழந்தைகளை உருவாக்கும் இயந்திரங்கள்” என அமெரிக்காவில் உள்ள சீன தூதரகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவிட்டு, பின்னர் பதிவை நீக்கியது.

அதேபோல் நெதர்லாந்தில் உள்ள சீன தூதரகம் அந்நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சிந்தனையாளர்களுக்கு எதிராக கருத்து வெளியிட்டது. மேலும் ஆஸ்திரேலியாவுக்கான சீன தூதர் செங் ஜிங்யே, பெண்களுக்கான ரேவன்ஸ்வுட் பள்ளியில் உள்ள சர்ச்சைக்குரிய கன்பூசியஸ் நிறுவனத்திற்கு சென்றார்.

சீனா பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தின் ஒரு பகுதியாக பல நாடுகளில் சீன தூதரகங்கள் மற்றும் சட்ட சேவை மையங்கள் அல்லது நீதிமன்றங்கள் நிறுவி வருகிறது. ஏற்கனவே ஏறக்குறைய ஆப்ரிக்கா முழுவதும் சீனா சட்டவிரோத காவல்நிலையங்களை திறந்துள்ள நிலையில், இத்தாலி, கனடா, அயர்லாந்து, இங்கிலாந்து, உக்ரைன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் சீனா சட்டவிரோத காவல்நிலையங்களை நிறுவியுள்ளது.

இந்த நாடுகளில் சட்ட சேவை மையம் அல்லது நீதிமன்றங்களையும் நிறுவ முயற்சித்து வருகிறது. இதன் மூலம் அந்தந்த நாடுகளின் தேர்தல்களில் தலையிடுவது, உள்ளுர் அரசியலில் அதிகாரம் செலுத்துவது, இளைஞர்களை கம்யூனிசம் நோக்கி இழுப்பது, சீனாவிற்கு வெளியில் இருந்து ஜி ஜின்பிங்கிற்கு எதிரான எதிர்ப்பை கட்டுப்படுத்துவது போன்ற செயல்களில் சீனா ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.