TMC தலைவர் மீது பலாத்கார வழக்கில் FIR பதிவு செய்த CBI.. தேர்தலுக்கு பிந்தைய வன்முறை வழக்கில் நடவடிக்கை..
மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு நடந்த வன்முறையில் கற்பழிப்பு வழக்கு தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் ஷேடக சுபியான் மற்றும் 18 பேர் மீது CBI முதல் தகவல் அறிக்கையை (FIR) பதிவு செய்துள்ளது.
இதற்கு முன்னதாக ஷேக் சுபியான் பாஜக தொண்டர் தெபப்ரதா மைதி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இருந்தார். மேற்குவங்க சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட ஒரு நாளுக்கு பிறகு மே 3 அன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்களால் மைதி கடுமையாக தாக்கப்பட்டார்.
படுகாயங்களுடன் மைதி கொல்கத்தாவில் உள்ள SSKM மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் மே 13 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மைதி கொலை வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் வழக்கில் சுபியானுக்கு சிபிஐ செப்டம்பர் 2021 அன்று சம்மன் அனுப்பியது.
இந்த கொலை வழக்கில் ஷேக் சுபியானுக்கு உச்ச நீதிமன்றம் புதன்கிழமை முன்ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷேக் சுபியான் மற்றும் 15 பேர் மீது பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பிப்ரவரி 2 ஆம் தேதி சிபிஐ FIR பதிவு செய்துள்ளது.
புகார்தாரர் சிபிஐயை அணுகி தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார். மே 3, 2021 அன்று சுவியான் மற்றும் பலர் தனது கணவரை தேடி தனது வீட்டிற்கு வந்ததாகவும், பின்னர் தன்னை தாக்கியதாகவும் அவர் கூறியுள்ளார். இதுதவிர மைனர் சிறுமி உள்ளிட்ட பல பெண்கள் கூட்டு பலாத்கார சம்பவங்கள் குறித்து எஸ்ஐடி விசாரணை கோரி பல பெண்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அவர்கள் தாக்கல் செய்த மனுவில் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்களால் தாங்கள் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக மனுவில் கூறியுள்ளனர். இதன் அடிப்படையில் மே 25, 2021 அன்று மேற்கு வங்க அரசு, NHRC, NCPCR, NCW மற்றும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தேர்தலுக்கு பின்னர் நடந்த வன்முறை தொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்றம் கடந்த ஆகஸ்டு மாதம் சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது. 50க்கும் மேற்பட்ட கொடூரமான வழக்குகள் சிபிஐயால் விசாரிக்கப்படுகின்றன. சிபிஐ மீது நம்பிக்கை இல்லை என கூறி மேற்குவங்க அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
இதுதவிர இந்தியா-வங்கதேச எல்லையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பசு கடத்தல் மோசடி தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிர்பூம் மாவட்ட தலைவர் அனுப்ரதா மோண்டலுக்கு சிபிஐ வியாழன் அன்று சம்மன் அனுப்பியுள்ளது. பிப்ரவரி 14 ஆம் தேதி ஆஜராக அதில் கூறப்பட்டுள்ளது.
அதே பசு கடத்தல் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்பியும், தேவ் என்று அழைக்கப்படும் நடிகருமான தீபக் அதிகாரிக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. தீபக் பிப்ரவரி 15 அன்று ஆஜராக சம்மனில் கூறப்பட்டுள்ளது. இதற்கு முன் பசு கடத்தல் வழக்கில் தொழிலதிபர் பினய் மிஸ்ராவின் சகோதரர் பிகாஷ் மிஸ்ரா உட்பட பல நபர்களை சிபிஐ விசாரித்தது.
முக்கிய குற்றவாளியான எனாமுல் ஹக்கிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் பிகாஷ் மிஸ்ரா மற்றும் எனாமுல் இருவருக்கும் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த மோசடியில் ஈடுபட்டதாக 36 பிஎஸ்எஃப் பட்டாலியன் பிரிவின் முன்னாள் கமாண்டன்ட்டையும் சிபிஐ கைது செய்தது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் பல்வேறு கொலை, கொல்லை, கற்பழிப்பு போன்ற வழக்குகளில் சிக்கியுள்ளதால் மேற்குவங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.