சீனாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய கனடா.. எச்சரித்த சீன தூதர்..
உய்குர் சிறுபான்மை சமூகத்தை சீனா மனிதாபிமானமற்ற முறையில் நடத்துவது ஒரு “இனப்படுகொலை” என கூறும் நாடுகளின் பட்டியலில் கனடாவும் அமெரிக்காவுடன் இணைந்துள்ளது.
கனடா பாராளுமன்ற வாக்கெடுப்புக்கு பின்னர், கனடாவின் சட்டமியற்றுபவர்கள் ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் சமூகத்தை சீனா நடத்தும் விதத்தை ஒரு இனப்படுகொலையாக அங்கீகரிக்கும் தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.
கனடாவின் பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ மற்றும் சில மூத்த அமைச்சரவை உறுப்பினர்கள் வாக்களிப்பில் இருந்து விலகினாலும், திங்களன்று நடைபெற்ற இந்த வாக்கெடுப்பில் மற்ற அனைத்து உறுப்பினர்களும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
“சீனாவில் உய்குர் முஸ்லிம்கள் இனப்படுகொலைக்கு உட்படுத்தபட்டுள்ளனர்” என்ற தீர்மானம் கனடா பாராளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
சீனா மற்றும் ஆசிய நாடுடனான ஒரு சுமூகமான உறவை பராமரிக்கவும் நாடுகளுக்கு இடையே ஒரு சமநிலையை ஏற்படுத்த தீவிரமாக முயன்று வரும் ட்ரூடோவிற்கு இது பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், டிசம்பர் 2018 இல் ஹவாய் இன் உயர்மட்ட தலைவர் மெங் வான்ஜோ கைது செய்யப்பட்டதில் இருந்து கனடா மற்றும் சீனா இடையேயான உறவு மோசமடைந்துள்ளது.
வாக்களிப்பிற்கு சில மணி நேரத்திற்கு முன்னர் கனடாவுக்கான சீனாவின் தூதர் அந்த நாட்டை விமர்சித்து, சீனாவின் உள் விவகாரங்களில் தலையிடுவதற்கு எதிராக அந்நாட்டை எச்சரித்திருந்தார்.
சீன தூதர் கூறும்போது, நாங்கள் அதனை உறுதியாக எதிர்க்கிறோம், ஏனென்றால் அது உண்மைகளுக்கு எதிரானது. எங்கள் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம். ஜின்ஜியாங்கில் இனப்படுகொலை நடப்பது போல் எதுவும் இல்லை என காங் பீவு கூறினார்.