முகபாவனையை வைத்தே ஆபத்தில் இருக்கும் பெண்களை கண்டறியும் கேமரா
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நவீன தொழில்நுட்பத்தை உத்தரபிரதேச காவல்துறை பயன்படுத்த உள்ளது. புதிய முயற்சியாக
பொதுவெளியில் நவீன கேமராக்களை நிறுவும் உ.பி. போலிஸ், அதன் கண்ணில் படும் பெண்களின் முகபாவனையை வைத்தே அவர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறாரா என்பதை கண்டறிய முடியும்.
அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கும் பெண்களின் புகைப்படத்தை இந்த செயற்கை நுண்ணறிவுடன் கூடிய கேமராக்கள் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தானாகவே அனுப்பி வைக்கும்.
உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வரும் நிலையில், தேசிய மகளிர் ஆணையம் இந்த விவகாரத்தில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் அம்மாநில காவல்துறை களமிறங்கி உள்ளது.
அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கும் பெண்களை கண்டறிவதற்காக செயற்கை நுண்ணறிவுடன் கூடிய கேமராவை முதலில் லக்னோ நகரில் அமல்படுத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது.
பொதுவெளியில் நிறுவப்படும் இந்த கேமராக்கள் கண்ணில் படும் பெண்களின் முகபாவனைகளை வைத்தே அவர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறாரா? பெண்களின் முக பாவனைகளில் மாற்றம் இருந்தால், அவர் பின் தொடர்தலுக்கோ, அச்சுறுத்தலுக்கோ அல்லது ஈவ் டீஸிங்கிற்கோ ஆளாகி இருக்கலாம் என கருதி அவர்களின் புகைப்படங்களை தானியங்கி முறையில் பதிவு செய்து, அதனை அருகில் இருக்கும் காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கும். ஆபத்தில் இருக்கும் பெண்கள் அவசர உதவி எண்களை டயல் செய்யும் முன்பாகவே அவர் குறித்த தகவல்கள் காவல் நிலையத்திற்கு சென்று விடும்.
இதன் மூலம் காவல்துறையினர் உடனடியாக ஆபத்தில் இருக்கும் பெண்களுக்கு உதவ முடியும்.
பெண்கள் அதிகமாக நடமாடும் 200 இடங்கள் கண்டறிந்து அந்த இடங்களில் இந்த செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் நிறுவப்படும் என லக்னோ காவல் ஆணையர் கூறியுள்ளார்.
தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவி ரேகா சர்மா, உத்தரப்பிரதேச டிஜிபியை நேரில் சந்தித்துப் பேசியபோது, மாநிலத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு, நிலுவையில் உள்ள புகார்கள், புகார் தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து பேசினார்.
உத்திரபிரதேச மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்புக்காக கொண்டு வரப்பட்டுள்ள 112 அவசர எண் உதவி சேவை, மிஷன் சக்தி, ‘Safe City’ திட்டம் ஆகியவை தொடர்பாக டிஜிபி, தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மாவிடம் எடுத்து கூறினார்.
தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உ.பி.யில் 2019ம் ஆண்டுக்கான பாலியல் வன்புணர்வு ஒரு லட்சத்திற்கு 2.8 ஆக இருப்பதாகவும், இது கடந்த 2016, 2017ல் 4.6 மற்றும் 4.0 ஆக இருந்தது எனவும், இதன் மூலம் மற்ற மாநிலங்களை விட பெண்களின் பாதுகாப்பில் அதிக கவனம் வருவதாகவும் டிஜிபி கூறினார்.