800 கிலோமிட்டர் இலக்கை தாக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ள பிரம்மோஸ் ஏவுகணை..?

இந்தியா தற்போது 800 கிலோமீட்டருக்கு மேல் உள்ள எதிரிகளின் இலக்கை தாக்கும் திறன் கொண்ட பிரம்மோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணையின் புதிய பதிப்பை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரம்மோஸ் ஏவுகணையின் தாக்குதல் தூரம் ஏற்கனவே அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிக உயரத்தில் செல்வதன் மூலம் ஏவுகணை 800 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்க முடியும். முன்னதாக இந்த ஏவுகணை Su-30MKI போர் விமானத்தில் இருந்து ஏவப்பட்டபோது 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கி அழித்தது.

சமீபத்தில் பிரம்மோஸ் ஏவுகணை கமாண்ட் ஏர் ஸ்டாஃப் இன்ஸ்பெக்ஷனின் (CASI) போது தொழிற்நுட்ப கோளாறு காரணமாக தவறுதலாக பாகிஸ்தானின் பகுதியில் விழுந்தது. வெடிபொருள் நிரப்பப்படாத அந்த ஏவுகணை அங்கு குறைவான சேதத்தை ஏற்படுத்தியது. மேலும் உயிரிழப்பு ஏதும் இல்லை என பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான் இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என இந்தியாவை வலியுறுத்தியது. இதற்கு பதிலளித்த இந்தியா ஏவுகணை தொழிற்நுட்ப கோளாறு காரணமாக பாகிஸ்தான் பகுதிக்குள் விழுந்ததாகவும், இதற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் தெரிவித்து கடிதம் அனுப்பியது.

இந்தியா சமீபத்தில் பிரம்மோஸ் ஏவுகணையின் வரம்பை மேம்படுத்தி வருகிறது. அதன் மென்பொருளை மேம்படுத்துவதன் மூலம் 500 கிலோமீட்டர்களுக்கு அப்பால் உள்ள இலக்கை தாக்கி அழிக்க முடியும். இந்திய விமானப்படை அதன் 40 Su-30MKI போர் விமானங்களில் பிரம்மோஸ் குரூஸ் ஏவுகணைகளை பொருத்தியுள்ளது.

இது எதிரி முகாம்களில் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தும். கால்வானில் சீனா உடனான மோதலின் உச்சக்கட்டத்தின் போது இந்த போர் விமானங்கள் தஞ்சாவூர் விமானப்படை தளத்தில் இருந்து வடக்கு நோக்கி கொண்டு வரப்பட்டது. தற்போது ஏவுகணையின் வரம்பை அதிகரிப்பதன் மூலம் இந்தியாவில் இருந்து கொண்டே எதிரிகளுக்கு மிகப்பெரிய அழிவை ஏற்படுத்த முடியும்.

Leave a Reply

Your email address will not be published.