2013ல் மோடியின் பொதுகூட்டத்தில் குண்டுவெடிப்பு.. 4 பேருக்கு மரண தண்டனை விதித்து NIA நீதிமன்றம் தீர்ப்பு..

மோடியின் பேரணியின் போது 2013 ஆம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் 4 பேருக்கு மரண தண்டனை விதித்து பாட்னாவில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

2013 ஆம் ஆண்டு மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பாட்னாவில் தேர்தல் பிரச்சாரத்திற்கு மோடி சென்ற போது பேரணி நடந்த காந்தி மைதானத்திலும், பாட்னா இரயில் நிலையத்திலும் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது.

இந்த குண்டு வெடிப்பில் 6 பேர் உயிரிழந்தனர். 90 பேர் காயமடைந்தனர். இதனை அடுத்து இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பிடம் (NIA) ஒப்படைக்கப்பட்டது. 250க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

இறுதியில் 10 பேரை NIA கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியது. 8 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. பாட்னா NIA நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி குர்விந்தர் சிங் மல்ஹோத்ரா தீர்ப்பை வாசித்தார். அதில் 10 பேரில் 9 பேர் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நிலையில் அவர்களின் தண்டனை விவரத்தை நீதிபதி வாசித்தார்.

அந்த தீர்ப்பில் ஹைதர் அலி, இம்தியாஸ் அன்சாரி, நோமன் அன்சாரி, முசிபுல்லா அன்சாரி ஆகிய நான்கு பேருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அசாருதின் குரேஷி மற்றும் உமர் சித்திக் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

Also Read: இந்தியாவில் அடுத்த சில தசாப்தங்களுக்கு பாஜக அசைக்க முடியாத கட்சியாக இருக்கும்: பிரசாந்த் கிஷோர்

அகமது ஹூசைன் மற்றும் பெரோஸ் அஸ்ஸாமுக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனையும், இப்திகார் ஆலம் என்பவனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் குற்றம் சாட்டப்பட்ட பகியூதீன் என்பவரை ஆதாரம் இல்லாததால் தேசிய புலனாய்வு அமைப்பு வழக்கில் இருந்து விடுவித்தது.

குற்றவாளிகள் அனைவரும் தடை செய்யப்பட்ட இந்தியன் முஜாகிதின் மற்றும் இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும் தற்போது பாட்னாவில் உள்ள பெயூர் சிறையில் பலத்த பாதுகாப்புடன் அடைக்கப்பட்டுள்ளனர்.

Also Read: மீண்டும் ஒரு சர்ஜிகல் தாக்குதல் நடத்தப்படும்.. பாகிஸ்தானுக்கு அமித்ஷா எச்சரிக்கை.

காந்தி மைதனம் மற்றும் பாட்னா ரயில் நிலையத்தில் மொத்தம் 7 IED குண்டுகள் வெடித்தன. வெடிக்காத நிலையில் 10 குண்டுகள் கைப்பற்றப்பட்டன. தேசதுரோகம், சதித்திட்டம், கொலை முயற்சி, UAPA ஆகிய குற்றங்கள் நிருபிக்கப்பட்டதால் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Also Read: இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட பாகிஸ்தான் பயங்கரவாதி டெல்லியில் கைது..

Leave a Reply

Your email address will not be published.