உத்தரகாண்டில் மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது பாஜக.. புதிய கருத்துகணிப்பில் தகவல்..
உத்தரகண்டில் மீண்டும் பாஜக ஆட்சியை பிடிக்கும் என ஏபிபி- சி வோட்டர் நடத்திய கருத்துகணிப்பில் கூறப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு உத்தரகாண்ட், பஞ்சாப், உத்திரபிரதேசம், கோவா மற்றும் மணிப்பூரில் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் ஏற்கனவே வெளியான கருத்து கணிப்பில் பஞ்சாபை தவிர்த்து மற்ற நான்கு மாநிலங்களில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டது. இந்த சர்வே விவசாய சட்டத்தை ரத்து செய்வதற்கு முன்பு எடுக்கப்பட்டது. இந்த நிலையில் ABP நியூஸ் மற்றும் சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்து கணிப்பில் உத்தரகண்டில் பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைக்க உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் புதிதாக களத்தில் இறங்கும் ஆம் ஆத்மி கட்சியால் காங்கிரஸ் வாக்குகள் பிரிந்து அது பாஜகவுக்கு சாதகமாக அமைய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஏபிபி-சி வோட்டர் கருத்துகணிப்பின் படி, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் பாஜக 39.8 சதவீத வாக்குகளை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் 35.7 சதவீத வாக்குகளும், புதிதாக களமிறங்கியுள்ள ஆம் ஆத்மி 12.6 சதவீத வாக்குகளை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த கருத்து கணிப்பு நவம்பர் 13 முதல் டிசம்பர் 9 வரை எடுக்கப்பட்டவை ஆகும். உத்திர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவாவில் மொத்தம் 92,000 மேற்பட்ட வாக்காளர்களிடம் இந்த கருத்துகணிப்பு நடத்தப்பட்டுள்ளதாக ஏபிபி- சி வோட்டர் தெரிவித்துள்ளது. பிராந்திய வாரியாக எடுக்கப்பட்ட கருத்துகணிப்பில் குமாவோன் மற்றும் கர்வால் பிராந்தியங்களில் பாஜகவுக்கு ஆதரவு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
தாராய் பகுதியில் பாஜகவை விட காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்த கருத்து கணிப்பில் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஹரிஷ் ராவத் முதல்வர் பதவிக்கு விருப்பமான தேர்வு என 33.5 சதவீதம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு முதலைமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக முதல்வரான புஷ்கர் சிங் தயியே மீண்டும் முதலமைச்சர் பதவிக்கு பொருத்தமானவர் என 26.6 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
Also Read: பாஜகவில் இணைந்தார் மஞ்சிந்தர் சிங் சிர்சா.. அதிர்ச்சியில் சிரோமணி அகாலி தளம்..
18 சதவீதம் பேர் பாஜகவின் அனில் சிங் பலுனி முதல்வர் பதவிக்கு சிறந்த தேர்வு எனவும், 8.9 சதவீதம் பேர் ஆம் ஆத்மி கட்சியின் கர்னல் அஜய் கோத்தியா சிறந்த தேர்வு எனவும் கருத்து தெரிவித்துள்ளனர். கோவில்களை அரசின் கட்டுப்பாட்டில் வைக்கும் தேவஸ்தான வாரியத்தை கலைத்ததன் மூலம் திரிவேந்திர சிங் ராவத் ஆட்சி காலத்தில் பாஜகவுக்கு எதிராக இருந்த கோபம் தற்போதைய முதல்வர் புஷ்கர் சிங் ஆட்சியில் குறைந்து விட்டதாக 64.1 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
Also Read: இஸ்லாம் மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறினார் முன்னாள் ஷியா வக்ஃப் வாரிய தலைவர்..
35.9 சதவீதம் பேர் தற்போதைய முதல்வர் புஷ்கர் சிங் ஆட்சியில் அரசுக்கு எதிராக மக்களின் கோபம் நீடிப்பதாக தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் பிரதமர் மோடியின் கேதார்நாத் யாத்திரை மக்களின் மனநிலையை பாஜகவுக்கு ஆதரவாக மாற்றியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மாநிலத்தின் நிரந்தர தலைநகராக கெய்ர்சைனை மாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் அறிவித்து இருப்பது காங்கிரஸ் கட்சிக்கு பலனளிக்காது என 62.4 சதவீத பேரும், பயனளிக்கும் என 37.6 சதவீத பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.