இந்து கோவில் கட்ட இடம் ஒதுக்கிய பஹ்ரைன்.. நன்றி தெரிவித்த பிரதமர் மோடி..
பிரதமர் நரேந்திர மோடி பஹ்ரைன் பிரதமர் சல்மான் பின் ஹமத் அல் கலீஃபாவுடன் செவ்வாய் அன்று தொலைபேசியில் உரையாடினார். அப்போது இந்து கோவில் கட்ட நிலம் வழங்கிய பஹ்ரைன் பிரதமருக்கு பிரதமர் மோடி நன்றி என தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
உரையாடலின் போது இருநாட்டு தலைவர்களும் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள், பிராந்திய அரசியல், வர்த்தகம், ஆற்றல், சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் முதலீடு உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து பேசப்பட்டது. இந்த உரையாடலின் போது பஹ்ரைன் பிரதமர் இந்தியர்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்தாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்தியா மற்றும் பஹ்ரைன் இடையே தூதரக உறவுகளை நிறுவியதன் பொன் விழாவை இந்த ஆண்டு கொண்டாட உள்ளன. கோவிட் தொற்றுநோயின் போது இந்திய சமூகத்தை மிகுந்த அக்கறையுடன் கவனித்து, அவர்களின் சமூக மற்றும் கலாச்சார தேவைகளை பூர்த்தி செய்ததற்காக பஹ்ரைன் பிரதமருக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.
மேலும் இந்த உரையாடலின் போது பஹ்ரைன் பிரதமர் சல்மான் பின் ஹமத் அல் கலீபாவை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். ஸ்வாமிநாராயண் கோவிலுக்கு நிலம் ஒதுக்கியதற்காக பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். இதற்க முன்னதாக துபாய் மற்றும் அபுதாபியிலும் இந்து கோவில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
துபாயில் ஜெபல் அலி பகுதியில் கட்டப்பட்டு வரும் இந்த கோவிலின் கட்டுமான பணி அடுத்த ஆண்டுக்குள் நிறைவடையும் என கூறப்படுகிறது. இந்த கோவில் கட்டுமான பணிக்கு ஆகஸ்டு 29, 2020 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. இதுதவிர அபுதாபியிலும் 888 கோடி ரூபாய் செலவில் இந்து கோவில் கட்டப்பட்டு வருகிறது.
இந்த கோவில் 1000 ஆண்டுகள் வரை உறுதியாக இருக்கும் என இந்து கோவில் அபுதாபி திட்டத்தின் அமைப்பான போச்சன்வாசி அக்ஷர் புருஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்தா அமைப்பு தெரிவித்துள்ளது. அரபு நாடுகளில் இந்து கோவில் கட்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு அடுத்ததாக இடம் வழங்கிய இரண்டாவது நாடு பஹ்ரைன் ஆகும்.