இந்திய விமானப்படை மற்றும் கடற்படைக்கு 3000 கோடி மதிப்பில் அஸ்திரா ஏவுகணை.. ஒப்பந்தம் கையெழுத்தானது..

பாதுகாப்பு உற்பத்தி துறையில் சுயசார்பு இந்தியா திட்டத்திற்கு ஊக்கம் அளிக்கும் வகையில், பாதுகாப்பு அமைச்சகம் செவ்வாய் அன்று இந்திய விமானப்படை மற்றும் கடற்படைக்காக அஸ்திரா Mk-1 ஏவுகணையை உற்பத்தி செய்ய பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (BDL) நிறுவனத்துடன் 2,971 கோடி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

செவ்வாய் அன்று பாதுகாப்பு அமைச்சகம், பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் அஸ்திரா Mk-1, பார்வை வரம்பிற்கு அப்பாற்பட்ட(BVR) ஏர் டு ஏர் ஏவுகணை (AAM) மற்றும் இந்திய விமானத்திற்கான தொடர்புடைய உபகரணங்களை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

அஸ்திரா Mk-1 என்பது போர் விமானங்களில் பொருத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட ஏர் டு ஏர் ஏவுகணை (AAM) அமைப்பின் பார்வை வரம்பிற்கு அப்பாற்பட்ட (BVR) அமைப்பாகும். இந்த ஏவுகணை அதிக சூழ்ச்சி திறன் கொண்ட சூப்பர்சோனிக் விமானங்களை தாக்கி அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இரவு பகல் என அனைத்து கால நிலைகளிலும் இலக்கை தாக்கி அழிக்க கூடியது.

அஸ்திரா Mk-1 ஏவுகணை Su-30 Mk-1 போர் விமானத்தில் பொருத்தப்பட உள்ளது. 2019 ஆம் ஆண்டு சந்திபூர் கடற்கரையில் Su-30 Mk-1 போர் விமானத்தில் இருந்து அஸ்திரா Mk-1யை DRDO வெற்றிகரமாக சோதனை செய்தது. அஸ்திரா Mk-1BVRAAM அமைப்பானது நவீன வழிகாட்டுதல் மற்றும் வழிசெலுத்துதல் தொழிற்நுட்பங்களுடன் 100 கிலோமீட்டருக்கும் அதிகமான வரம்பை கொண்டுள்ளது.

மேலும் இந்த ஏவுகணை இலக்கை துல்லியமாக அழிப்பதற்காக இடைநிலை வழிகாட்டுதல் மற்றும் ரேடியோ அலைவரிசை தேடுதல் அடிப்படையிலான முனைய வழிகாட்டுதலை கொண்டுள்ளது. அஸ்திரா Mk-1 ஏவுகணை சு-30, மிராஜ்-2000, மிக்-29, தேஜஸ் போன்ற போர் விமானங்களில் இருந்து ஏவப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. F-16 போன்ற போர் விமானங்களை அழிக்கும் வகையில் ஏவுகணை அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

Also Read: இந்திய இராணுவத்திற்கு 100 ஹோவிட்சர்களை வழங்க உள்ள பாரத் ஃபோர்ஜ்..?

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட், விமானத்தை ஏவுகணை ஓருங்கிணைப்புக்காக மாற்றியமைப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளது. இந்த அஸ்திரா Mk-1 ஆயுத அமைப்பை உருவாக்குவதில் 50க்கும் மேற்பட்ட பொது மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் பங்களித்துள்ளன. அஸ்திரா Mk-1 இந்தியாவின் முதல் உள்நாட்டு ஏவுகணையாகும். இதற்கு முன் ரஷ்ய மற்றும் இஸ்ரேலிய ஏவுகணை அமைப்புகளை சார்ந்தே இந்தியா இருந்துள்ளது.

Also Read: INS விக்ராந்த் விமானந்தாங்கி கப்பலுக்காக 26 போர் விமானங்களை வாங்க உள்ள இந்திய கடற்படை..?

ஏவுகணை தயாரிப்பதற்கான தொழிற்நுட்பத்தை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பிலிருந்து BDL எநிறுவனத்திற்கு மாற்றும் பணி நிறைவடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். தற்போது BDL நிறுவனத்தில் ஏவுகணை உற்பத்தி நடந்து வருகிறது. இந்திய விமானப்படைக்கு 200 மற்றும் இந்திய கடற்படைக்கு 48 அஸ்திரா Mk-1 ஏவுகணைகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.

Also Read: கர்நாடகாவில் அமைகிறது ஆசியாவின் மிகப்பெரிய கடற்படைத் தளம்..? INS விக்ராந்தை நிறுத்த முடிவு..

Leave a Reply

Your email address will not be published.