சீனாவின் YMTC சிப்களை ஐபோன்களில் பயன்படுத்தும் திட்டத்தை கைவிட்ட ஆப்பிள்..!

சீன தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்கா ஏற்றுமதி தடைகளை விதித்த நிலையில், அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம், சீனாவின் யாங்சே மெமரி டெக்னாலஜிஸ் கோ (YMTC) நிறுவனத்தின் மெமரி சிப்களை ஆப்பிள் சாதனங்களில் பயன்படுத்துவதற்கான திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது.

சீன அரசு நிதியுதவி பெற்ற நிறுவனமான YMTC தயாரித்த NAND ஃபிளாஷ் மெமரி சிப்களை பயன்படுத்த ஆப்பிள் முதலில் திட்டமிட்டு இருந்தது. சீனாவின் இந்த சிப்கள் விலை குறைவாகவும், தரமாகவும் இருப்பதால் முதலில் சீன சந்தையில் விற்கப்படும் ஐபோன்களில் மட்டும் பயன்படுத்த திட்டமிட்டு இருந்தது.

பின்னர் அனைத்து ஐபோன்களுக்கும் 40 சதவீதம் வரை வாங்குவது குறித்து ஆப்பிள் பரீசிலித்து வந்தது. இந்த நிலையில் இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்க அரசாங்கம் சீனாவிற்கு எதிராக கடுமையான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதித்தது. YMTC மற்றும் மற்ற பிற 30 சீன நிறுவனங்கள் கடந்த வாரம் அமெரிக்க அதிகாரிகளால் சரிபார்க்க முடியாத நிறுவனங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

இந்த நிறுவனங்கள் 60 நாட்களுக்குள் உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் நிரந்தரமாக பட்டியலில் சேர்க்கப்படும். NAND ஃபிளாஷ் மெமரி சிப்கள் ஸ்மார்போன்கள், கணினிகள் உட்பட அனைத்து மின்னணு சாதனங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள இந்த சரிபார்க்கப்படாத நிறுவனங்களுக்கு வடிவமைப்பு, தொழில்நுட்பங்கள், விவர குறிப்புகள் ஆகியவற்றை பகிர்வதற்கு அமெரிக்க நிறுவங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டம் சீன நிறுவங்களுக்கு மேம்பட்ட சிப்களை தயாரிக்க உதவும் சேவைகள் அல்லது தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதில் இருந்து அமெரிக்க சிப் நிறுவனங்களை தடுக்கிறது.

அமெரிக்க ஏற்றுமதி சட்டங்களை மீறியதால் தடை செய்யப்பட்ட சீனாவின் ஹூவாய் நிறுவனத்திற்கு YMTC சிப்களை விற்பனை செய்ததா எனவும் அமெரிக்கா ஆய்வு செய்து வருகிறது. அமெரிக்காவின் இந்த தடை மூலம் சீனாவின் சிப் உற்பத்தி துறை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும் சீன நிறுவங்களில் பணியாற்றும் அமெரிக்க தொழில்நுட்ப வல்லுநர்களும் தங்களது வேலையை ராஜினாமா செய்து வருகின்றனர்.

இது சீனாவிற்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. தென்கொரியாவின் சாம்சங் மற்றும் SK ஹைனிக்ஸ், ஜப்பானின் கியோக்ஸியா மற்றும் அமெரிக்காவின் மைக்ரான் போன்ற நிறுவங்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் NAND ஃபிளாஷ் மெமரி சிப் துறையில் கால்பதிக்க சீனாவின் YMTC நிறுவனம் முயன்ற நிலையில் தற்போது அதற்கு அமெரிக்கா தடைவிதித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.