இந்தியா எதிர்ப்பு: உளவு கப்பல் வருகையை ஒத்திவைக்குமாறு சீனாவுக்கு இலங்கை கடிதம்..!

சீன உளவு கப்பலின் நோக்கம் குறித்து இந்தியா கவலை தெரிவித்ததை அடுத்து, யுவான் வாங் 5 என்ற உளவு கப்பலின் வருகையை ஒத்திவைக்குமாறு இலங்கை சீனாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை சீனா ஆகிய இரு அரசாங்கங்களுக்கிடையே மேலும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும் வரை அம்பாந்தோட்டா துறைமுகத்தில் அதன் விண்வெளி செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான யுவான் வாங் 5 இன் பயணத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை அரசாங்கம் சீன அரசாங்கத்திடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

சீனாவின் உளவு கப்பல் ஆகஸ்ட் 11 முதல் ஆகஸ்ட் 17 வரை இலங்கையின் ஹம்பந்தோட்டா துறைமுகத்தில் நிறுவத்தப்பட உள்ளது. சீனாவின் உளவு கப்பலான யுவான் வாங் 5 2007 ஆம் ஆண்டு கட்டப்பட்டது மற்றும் 11,000 டன்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது. ஜூலை 13 அன்று சீனாவின் ஜியாங்யினில் இருந்து புறப்பட்ட இந்த கப்பல் தற்போது தைவான் அருகே வந்து கொண்டிருக்கிறது.

இந்த உளவு கப்பலால் நீர்மூழ்கி எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு கடல் படுகையை வரைப்படமாக்க முடியும். மேலும் இந்திய கடற்படை தளங்கள், சந்திப்பூரில் உள்ள இஸ்ரோ ஏவுகணை நிலையங்கள், அணுமின் நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் ஆகியவற்றை சீன கப்பலால் உளவு பார்க்க முடியும் என்பதால் இந்தியா சீன கப்பல் இலங்கை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.

ஆகஸ்ட் 5 அன்று இலங்கை வெளியுறவு அமைச்சகம் சீன உளவு கப்பல் அம்பாந்தோட்டா துறைமுகத்தில் நிறுத்துவதற்கான அனுமதியை ஒத்திவைத்தது மற்றும் இந்த கோரிக்கையை சீன வெளியுறவு அமைச்சக அதிகாரிகளுக்கு எழுத்துப்பூர்வமாக இலங்கை அனுப்பியுள்ளது. கப்பலுக்கு அனுமதி மறுப்பது இருதரப்பு உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என இலங்கைக்கான சீன தூதுவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை தற்போது பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், இலங்கைக்கு தற்போது இந்தியா மட்டுமே உதவி வருகிறது. இலங்கைக்கு பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு, உணவு பொருட்கள் மற்றும் மருந்து உள்ளிட்ட 3,5 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான உதவிகளை இந்தியா இலங்கைக்கு வழங்கியுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஹம்பந்தோட்டா துறைமுகத்தை சீனா 99 வருட குத்தகைக்கு எடுத்துள்ளது. தனது வெளிநாட்டு கடனில் 10 சதவீதத்திற்கும் அதிகமாக இலங்கை சீனாவிற்கு செலுத்த வேண்டியுள்ளது. ஹம்பந்தோட்டா துறைமுகத்தை சீனா இராணுவ நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த வாய்ப்பு உள்ளதாக அமெரிக்கா மற்றும் இந்தியா இலங்கைக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published.