யுவான் வாங் 6 கப்பலை தொடர்ந்து இந்திய பெருங்கடலில் நுழைந்த மற்றொரு சீன உளவுக்கப்பல்..!

இந்தியா இந்த மாத இறுதியில் ஏவுகணை சோதனை நடத்த உள்ள நிலையில், சீனாவின் இரண்டு உளவு கப்பல்கள் வங்காள விரிகுடாவில் முகாமிட்டுள்ளன. மேலும் இந்த பகுதியை இந்தியா, ஏரியா எச்சரிக்கை அல்லது பறக்க தடை விதிக்கப்பட்டுள்ள மண்டலமாக அறிவித்துள்ளது.

முன்னதாக நவம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் ஏவுகணை சோதனை நடத்த உள்ளதாக அறிவித்து, வங்காள விரிகுடாவில் பறக்க தடையும் விதித்து இருந்தது. பின்னர் சில நாட்களுக்கு முன்பு சீன உளவு கப்பலான யுவான் வாங் 6 இந்திய பெருங்கடலில் நுழைந்ததை அடுத்து ஏவுகணை சோதனை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் ஏவுகணை சோதனை இந்த மாத இறுதியில் நவம்பர் 23-24 ஆகிய தேதிகளில் சோதனை செய்யப்பட உள்ளன. இதனையடுத்து வங்காள விரிகுடாவில் 23-24 ஆகிய தேதிகளில் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 23-24 ஆகிய தேதிகளில் ஏவுகணை சோதனை நடத்தப்பட உள்ள நிலையில், மேலும் ஒரு சீன உளவு கப்பலான யுவான் வாங் 5 இந்திய பெருங்கடலில் நுழைந்துள்ளது.

கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்ட இந்த உளவுக்கப்பலானது, பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் செயற்கைக்கோள்களை கண்காணித்து சிக்னல் நுண்ணறிவுகளை சேகரிக்க கூடிய திறன் கொண்டது என கூறப்படுகிறது. இந்தியா தனது K-4 நீர்மூழ்கிக்கப்பலில் இருந்து ஏவப்படும் பாலிஸ்டிக் ஏவுகணையை (SLBM) சோதனை செய்ய உள்ளது.

பாலிஸ்டிக் ஏவுகணை என கூறப்பட்டாலும் இந்த ஏவுகணை அக்னி வரிசையை சேர்ந்த அணு ஆயுத ஏவுகணை எனவும் கூறப்படுகிறது. முன்பு வெளியிடப்பட்ட தகவலின்படி, ஏவுகணை 2,200 கிலோமீட்டர் தூரம் சென்று தாக்கக்கூடியவை என கூறப்படுகிறது. ஆனால் அதன் உண்மையான தாக்குதல் தூரம் 3,500 கிலோமீட்டர் என கூறப்படுகிறது.

யுவான் வாங் 5 உளவுக்கப்பல் தற்போது இந்தோனேசியாவின் பாலிக்கும் லோம்போக் தீவுக்கும் இடையில் உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கையில் ஹம்பந்தோட்டா துறைமுகத்தில் இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சீனாவின் உளவுக்கப்பலான யுவான் வாங் 5 கப்பல் நிறுத்தப்பட்டது. தற்போது இந்திய பெருங்கடலில் சீனாவின் யுவான் வாங் 6 மற்றும் யுவான் வாங் 5 உளவுக்கப்பல்கள் நுழைந்துள்ளன.

சீனா அதன் விண்வெளி ஆராய்ச்சிக்காக உளவுக்கப்பலை அனுப்பியுள்ளதாக கூறப்பட்டாலும், இந்தியாவின் ஏவுகணை சோதனையை உளவு பார்ப்பதற்காகவே அனுப்பப்பட்டுள்ளது. 3,500 கிலோமீட்டர் தாக்குதல் தூரம் கொண்ட இந்த ஏவுகணை வங்காள விரிகுடாவில் இருந்து சீனாவின் முக்கியமான நகரங்களை தாக்கும் திறன் கொண்டது. அதனாலயே சீனா உளவு பார்க்க கப்பல்களை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.