டெல்லியில் காற்று மாசுப்பாடு.. இரண்டு நாட்களுக்கு ஊரடங்கை அமல்படுத்த உச்ச நீதிமன்றம் அறிவுரை..

நாட்டின் தலைநகரான டெல்லியில் காற்று மாசுப்பாடு அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுபடுத்தும் நடவடிக்கைகளை ஆம் ஆத்மி அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் அங்கு ஒரு வாரத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் தற்போது காற்றின் தரக் குறியீடு 473 ஆக பதிவாகியுள்ளது.

டெல்லியில் காற்று மாசுப்பாடு அதிகரித்து வரும் நிலையில் ஆதித்யா துபே என்ற 17 வயது மாணவர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இதனை விசாரித்த தலைமை நீதிபதி என்வி ரமணா மற்றும் நீதிபதி சந்திரசூட், சூர்யகாந்த் அடங்கிய அமர்வு விசாரித்தது.

டெல்லியில் காற்று மாசுப்பாடு அதிகரித்தது தொடர்பாக மத்திய மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. மேலும் காற்று மாசுப்பாட்டை குறைக்க இரண்டு நாட்கள் ஊரடங்கை பிறப்பிக்கலாம் எனவும் டெல்லி அரசுக்கு அறிவுரை வழங்கியது.

இந்த நிலையில் அவசர கூட்டத்தை கூட்டிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பள்ளிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை அறிவித்துள்ளார். அரசு ஊழியர்களும் ஒரி வாரம் வீட்டில் இருந்தே பணிபுரிய உத்தரவிடப்பட்டுள்ளது. தனியார் அலுவலகங்களும் இதே உத்தரவை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் டெல்லியில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் ஊழியர்கள் தங்களது வாகன பயன்பாட்டை 30 சதவீதம் குறைக்க டெல்லி மாசுகட்டுப்பாட்டு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. நவம்பர் 14 முதல் 17 வரை டெல்லியில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

டெல்லி அரசு சார்பில் வீணாகும் மரம் மற்றும் செடிகளை நவீன முறையில் சிதைக்க 2 லட்சம் இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் தூசடைந்த சாலைகளை கண்டறிந்து சுத்தப்படுத்தவும், தண்ணீர் தெளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அனைத்து செங்கல் சூளைகள், கற்களை உடைக்கும் ஆலைகள் மறு உத்தரவு வரும் வரை இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களை குறைத்து இயற்கை எரிவாயு மின்சாரங்களை பயன்படுத்துதல் மற்றும் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு ஆகியவை செயல்படுத்தப்பட்டுள்ளன.

அவசர தேவையை தவிர டீசல் ஜெனரேட்டர்களுக்கு தடை, தனியார் வாகனங்களுக்கான பார்கிங் கட்டணத்தை நான்கு மடங்கு உயர்த்துதல், ஹோட்டல்கள் மற்றும் சிறிய உணவகங்களில் விறகு கட்டைகளை பயன்படுத்துவதை தடை விதித்தல், குப்பை கிடங்குகளில் குப்பைகளை எரிப்பதற்கு தடை விதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை டெல்லி அரசு எடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.