சட்ட ஒழுங்கு பிரச்சனையால் சீன நிறுவனங்களுக்கு எதிராக திரும்பும் ஆப்ரிக்க மக்கள்..

ஆப்ரிக்காவில் தற்போது சீன நிறுவனங்களுக்கு எதிராக ஆப்ரிக்க மக்கள் போராட தொடங்கியுள்ளனர். சீன நிறுவனங்கள் தங்கள் வளங்களை சுரண்டுவதாக மக்கள் கருதுகின்றனர்.

மேலும் சீன நிறுவனங்களை அவர்கள் சுதந்திரமான நிறுவனங்களாக இல்லாமல் சீன அரசின் ஒரு அங்கமாக ஆப்ரிக்க மக்கள் பார்கிறார்கள். ஆப்ரிக்க நாடுகளில் உள்ள சீன நிறுவனங்கள் வளர்ச்சி பணி என்ற பெயரில் அந்தந்த நாடுகளுக்கு கடன் கொடுக்கிறது.

சீன வங்கிகள் கடன் கொடுக்கும் நிலையில் அதற்கான டெண்டரும் சீன நிறுவனங்களுக்கே வழங்கப்படுகிறது. இதுதவிர எந்த திட்டமாக இருந்தாலும் அங்கு பணிபுரிவதற்கு ஆப்ரிக்கர்களை வேலைக்கு ஆள் எடுக்காமல் சீனர்களே அமர்த்தப்படுகிறார்கள். மேலும் பல்வேறு கட்டுமான மற்றும் பிற திட்டங்களுக்கு தேவையான உபகரணங்களும் சீனாவில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது.

இதனால் சீனா கடனாக கொடுத்த பணம் மீண்டும் சீனாவுக்கு சென்று விடுவதால் ஆப்ரிக்க மக்கள் வேலை இன்றி தவிப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் சீனா விரைவாக லாபம் பார்ப்பதாக ஜியோ-பொலிடிக் என்ற ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆப்ரிக்காவில் பத்தாயிரத்திற்கும் அதிகமான சீன நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சீனர்கள் வேலை பார்க்கின்றனர். இதனால் உள்ளுர் மக்களுக்கு வேலை கிடைப்பதில்லை. மேலும் பல நாடுகளில் தனியார் இராணுவங்களையும் சீனா அமர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.

ஆப்ரிக்காவில் செயல்படும் பல சீன நிறுவங்கள் ஆயுதமேந்திய போராளிகளை பயன்படுத்தி வருகிறது. இவை அந்தந்த நாடுகள், நிறுவங்கள் மற்றும் மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதாக கூறப்பட்டாலும், அவர்களால் தற்போது சட்ட ஓழுங்கு பிரச்சனை உருவாகியுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு இரண்டு சீன பாதுகாப்பு வீரர்கள் ஜாம்பியாவில் சட்டவிரோத பயிற்சி அளித்ததற்காகவும், உள்ளுர் பாதுகாப்பு நிறுவனத்திற்கு சீருடைகள் மற்றும் இராணுவ உபகரணங்களை வழங்கியதற்காகவும் கைது செய்யப்பட்டனர். காங்கோ, சூடான் மற்றும் தெற்கு சூடான் போன்ற நாடுகள் சீன நிறுவங்களின் செயல்பாடுகளால் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றன.

ஜிபூட்டி, மாலி, எகிப்து, எத்தியோப்பியா, தென்னாப்ரிக்கா மற்றும் தான்சானியா போன்ற நாடுகளில் சீன நிறுவனங்கள் பாதுகாப்பு கூட்டாண்மைகளை உருவாக்க முயற்சிப்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை அந்த நாடுகளுக்கும் பரவ கூடும் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

வேலை, பாதுகாப்பு உட்பட பல துறைகளில் சீன நிறுவங்களால் அச்சுருத்தல் ஏற்படும் நிலையில், சுற்றுச்சூழல் தொடர்பாகவும் பிரச்சனை எழுந்துள்ளது. மேலும் ஆப்ரிக்கர்களின் கலாச்சாரத்தையும் சீனர்கள் அவமதிப்பதாக ஆப்ரிக்க மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கிட்டத்தட்ட அனைத்து ஆப்ரிக்க மக்களும் சீன நிறுவனங்களுக்கு எதிராக இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.