அமெரிக்க விமானப்படை தளம் அருகே நிலம் வாங்கிய சீன நிறுவனம்..?

அமெரிக்காவின் வடக்கு டகோட்டாவில் உள்ள கிராண்ட் போர்க்ஸ் விமானப்படை தளம் அருகே 370 ஏக்கர் நிலத்தை சீன நிறுவனமான ஃபுஃபெங் குழுமம் வாங்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக பல சீன நிறுவனங்கள் முக்கியமான அமெரிக்க இராணுவ தளங்களுக்கு அருகாமையில் நிலத்தை வாங்கியுள்ளன அல்லது வாங்கும் செயல்முறையை தொடங்கியுள்ளன. கடந்த மே மாதம் வெளியிடப்பட்ட அமெரிக்க-சீன பொருளாதார மற்றும் பாதுகாப்பு மறுஆய்வு ஆணையம் (USCC) அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் ஃபுஃபெங் குழுமம் கிராண்ட் ஃபோர்க்ஸ் விமானப்படை தளத்தில் இருந்து 12 மைல் தொலைவில் 370 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராண்ட் ஃபோர்க்ஸ் விமானப்படை தளம், அமெரிக்க உளவுத்துறை, கண்காணிப்பு மற்றும் உளவு திறன்கள் உள்ளிட்ட பல பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.

மேலும் RQ-4 குளோபல் ஹாக் ஆளில்லா வான்வழி உளவு வாகனங்களின் முக்கிய ஆப்பரேட்டர்களின் ஒன்றான 319வது பிரிவின் உளவு பிரிவு இந்த விமானப்படை தளத்தில் அமைந்துள்ளது. அதுத்தவிர இந்த தளம் ஒரு விண்வெளி நெட்வொர்க்கிங் மையத்தை கொண்டுள்ளது. இந்த மையம் உலகளாவிய அமெரிக்க இராணுவ தகவல் தொடர்புகளை எளிதாக்க உதவும்.

இதேபோல் மற்றொரு சீன நிறுவனமான குவாங்ஹுய் எனர்ஜி கோ நிறுவனம், லாஃப்லின் விமானப்படை தளத்தில் இருந்து சுமார் 70 மைல் தொலைவில் 140,000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலத்தை சீன நிறுவனம் காற்றாலை அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களும் சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் நெருக்கமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் 30 அமெரிக்க சட்டமியற்றுபவர்கள், அரசாங்க பொறுப்புக்கூறல் அலுவலகத்திற்கு (GAO) எழுதிய கடிதத்தில், விவசாய நிலத்தில் வெளிநாட்டின் முதலீட்டின் அளவு மற்றும் அந்நிறுவனத்தின் தன்மைகளை கண்டறியுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2010 முதல் 2020 வரை அமெரிக்காவில் வெளிநாட்டு நிறுவனங்கள் விவசாய நிலங்கள் வாங்குவது இரு மடங்காக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.