புதிய தேஜாஸ் போர் விமானங்களில் 51% உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உத்தம் ரேடார்கள் பொருத்தப்படும் – DRDO
பாதுகாப்பு தளவாடங்களில் உள்நாட்டு உதிரிபாகங்களை பயன்படுத்த வேண்டும் என்ற இந்திய அரசின் உந்துதலுக்கு ஏற்ப, இந்திய விமானப்படையில் (IAF) சேர்க்க இருக்கும் புதிய LCA தேஜாஸ் போர் விமானங்களில் 51 சதவீதம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உத்தம்(Uttam) ராடார்களை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விமானங்களின் முதல் தொகுதியில் இருக்கும் இஸ்ரேலிய ராடார்களுக்கு பதிலாக உத்தம் ரேடார்கள் இருக்கும்.
இது உள்நாட்டு பாதுகாப்பு தொழில்நுட்பங்களுக்கு ஒரு ஊக்கமாக கருதப்படுகிறது, மேலும் தேஜாஸ் விமானம் என்று வரும்போது ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிட்டடின் (HAL) பங்கு அதிகரிக்கும்.
இந்திய விமானப்படையில் 123 தேஜஸ் விமானங்கள் சேர்க்கப்பட உள்ளன. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவர் சதீஷ் ரெட்டி கூறுகையில், “21வது தேஜாஸ் எம்கே-1லிருந்து உத்தம் ரேடார் பொருத்தப்பட உள்ளது. இதுவரை நடந்த சோதனைகளில் எதிர்பார்த்ததை விட உத்தம் ரேடார் சிறப்பாக செயல்பட்டுள்ளது என்றார்.
இது தொடர்பாக எச்ஏஎல் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாகவும் ரெட்டி கூறினார். 83 விமானங்களில் 63ல் DRDO ஆய்வகம் மற்றும் LRDE (Electronics and Radar Development Establishment) உருவாக்கிய உத்தம் ரேடார்கள் இருக்கும்.
உத்தம் என்பது AESA (Active electronically scanned array) ரேடார் ஆகும், இது இலக்குகளை கண்காணிக்கவும் மற்றும் உளவு நடவடிக்கைகளுக்கு தேவையான ஹை-ரெசல்யூஷன் படங்களை எடுக்கும் திறன் கொண்டது. இது இரண்டு எல்.சி.ஏக்கள் மற்றும் ஒரு எக்ஸிகியூட்டிவ் ஜெட் விமானத்தில் சோதனை செய்யப்படுவதாக உத்தமின் திட்ட இயக்குநர் சேஷகிரி பி கூறினார்.