பாகிஸ்தானில் ISI, இராணுவம், நீதித்துறை பற்றி விமர்சிப்பவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை..?
பாகிஸ்தானில் இராணுவம், நீதித்துறை, அரசு அதிகாரிகள் மற்றும் ISI பற்றி போலியான செய்தி வெளியிடும் சமூக ஊடக பயனாளருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் பாகிஸ்தான் அரசு சட்ட திருத்தம் மேற்கொண்டுள்ளது.
பாகிஸ்தான் அரசு சைபர் கிரைம் சட்டத்தில் மாற்றம் செய்துள்ளது. அதன்படி, நாட்டில் உளவு அமைப்பான ISI, அரசு அதிகாரிகள், இராணுவம் மற்றும் நீதித்துறை பற்றி சமூக ஊடகங்களில் தவறான செய்தியை வெளியிடுவோரை தண்டிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தின் படி குற்றம் நிருபிக்கப்பட்டால் குற்றவாளிகளுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். பிரதமர் இம்ரான்கானின் அமைச்சரவையில் சட்டம் அங்கீகரிக்கப்பட்ட நிலையில், ஜனாதிபதி ஆரிப் அல்வியால் சட்டமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இருப்பினும் 90 நாட்களுக்குள் பாராளுமன்றத்தில் இந்த சட்டத்துற்கு ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும். பாகிஸ்தான் மனித உரிமை ஆணையம் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அரசாங்கத்திற்கு எதிராக பேசுபவர்கள் மற்றும் விமர்சகர்களை ஒடுக்க நினைக்கிறது என குற்றம் சாட்டியுள்ளது.
பாகிஸ்தானில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பத்திரிக்கையாளர் ஒருவர் கொல்லப்பட்டார். ஏற்கனவே பாகிஸ்தானில் கருத்து சுதந்திரம் நசுக்கப்படும் நிலையில் தற்போது இந்த சட்டத்தை இம்ரான்கான் அரசு நிறைவேற்றியுள்ளது. பாகிஸ்தான் அரசு தற்போது பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.
இதனால் இம்ரான்கான் அரசை பொதுமக்கள் விமர்சித்து வருகின்றனர். இதனை ஒடுக்கவே இம்ரான்கான் இந்த சட்டத்தை நிறைவேற்றியுள்ளதாக விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. மேலும் பயங்கரவாதத்திற்கு ஆதராகவும் இம்ரான்கான் அரசு மற்றும் இராணுவம் செயல்பட்டு வருவதால் இம்ரான்கான் அரசு பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.