தமிழக பள்ளி கல்வித்துறைக்கு 40,000 கோடி ஒதுக்கியும் ஏன் மாணவர்களின் தரத்தை உயர்த்த முடியவில்லை?

தமிழக பள்ளி கல்வித்துறைக்கு 40,000 கோடி ஒதுக்கியும் ஏன் அரசு பள்ளி மாணவர்களின் தரத்தை உயர்த்த முடியவில்லை என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழக பட்ஜெட்டில் ஏறக்குறைய 40,000 கோடி பள்ளி கல்வித்துறைக்கு ஒதுக்கியும், ஏன் உங்களால் அரசு பள்ளி மாணவர்களுடைய தரத்தை உயர்த்த முடியாமல் போயிற்று. தமிழகத்தில் இருக்க கூடிய அரசுப்பள்ளி மாணவர்களை நீட் தேர்வு ஒதுக்குகிறது, இது அறிவு தீண்டாமை என்று குற்றம் சுமத்துகிறார் ஸ்டாலின்.

1967ல் இருந்து நீங்கள் ஐந்தாவது முறையாக ஆட்சிக்கு வந்திருக்கீறீர்கள். தமிழகத்தில் ஆரம்ப பள்ளி, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை என இருக்கக்கூடிய 58,000க்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்களில் ஏறக்குறைய இரண்டரை லட்சத்திற்கும் ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள்.

ஆண்டொன்றுக்கு தோராயமாக 3 லட்சம் கோடி ஒதுக்கப்படும் தமிழக பட்ஜெட்டின் மொத்த நிதியில் ஏறக்குறைய 40,000 கோடி ரூபாய் பள்ளிக்கல்வி துறைக்கு மட்டுமே ஒதுக்கப்படுகிறது. அப்படி இருந்தும் உங்களால் ஏன் அரசு பள்ளி மாணவர்களுடைய தரத்தை உயர்த்த முடியாமல் போயிற்று.

அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து ஒரு பள்ளிக்கு ஒரு மாணவர் என்று கணக்கு வைத்தால் கூட தமிழகத்திலுள்ள மொத்த மருத்துவ இடங்களில் 90 சதவீதம் இடங்களை அரசுப்பள்ளி மாணவர்கள் தானே நிரப்ப வேண்டும். அது ஏன் நடைபெறவில்லை? அதைப்பற்றி நீங்கள் என்றாவது சிந்தித்ததுண்டா?

நீட் தேர்வு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுவது அல்ல. National Council of Educational Research and Training (NCERT) என்று அழைக்கப்படக்கூடிய மத்திய அரசின் விரிவான பாடத்திட்டத்தினுடைய அடிப்படையிவேயே நடத்தப்படுகிறது. தமிழ்நாடு அரசு பாடநூல் கழகம் என்று ஒன்று செயல்படுகிறதே, அந்த நிறுவனம் மத்திய அரசின் பாடத்திட்டத்தை புரட்டி பார்த்தால் என்ன குறைந்து போய்விடப் போகிறது.

நல்ல பாடத்திட்டத்தையும், நல்ல கல்விமுறையையும் அமலாக்குவதை பற்றி சிந்தியுங்கள். அதனால் இளைய தலைமுறை தங்களை மேம்படுத்தி கொள்ள முடியும்.

பிறவி அறிவாளி என்பாருமில்லை!
பிறவி மூடர் என்பாருமில்லை!

எல்லாமே பயிற்சியில் தான் இருக்கின்றன. அரசுப்பள்ளி மாணவர்களாலும் ஜொலிக்க முடியும். ஜெயிக்க முடியும் என டாக்டர் க.கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.