வெளிநாடு தப்பி செல்ல முயன்ற 3 ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் கைது..

ஹரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 3 பேர் ஞாயிற்றுகிழமை கைது செய்யப்பட்டனர். இவர்கள் 3 பேரும் போலி பாஸ்போர்ட் தயாரித்து வெளிநாடு தப்பி செல்வதற்காக டெல்லி விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த போது கணவுர் மற்றும் முர்தல் இடையே கைது செய்யப்பட்டனர்.

இந்த 3 பயங்கரவாதிகளும் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக போலிசார் தெரிவித்துள்ளனர். இவர்கள் ஜம்மு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி அளித்து வந்துள்ளனர். கைது செய்யப்பட்ட 3 பேரில் இரண்டு பேர் கணவன் மனைவி ஆவர். மற்றொருவன் இவர்களது கூட்டாளி ஆவான். கைது செய்யப்பட்ட கணவன் மனைவி ரவி மற்றும் வரீந்திர தீப் கவுர் ஆவர்.

இவர்கள் இரண்டு பேரும் பஞ்சாபில் உள்ள டர்ன் தரனில் வசித்து வந்தனர். மற்றொருவன் சண்டிகரில் வசிக்கும் கனப் அரோரா என அடையாளம் காணப்பட்டுள்ளது. ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த இந்த மூன்று பேரும் வாகனத்தில் சோனேபட் வழியாக டெல்லி சென்று கொண்டிருப்பதாக ஜம்மு காஷ்மீர் போலிசார் சோனேபட் போலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த மூன்று பேரின் புகைப்படத்தையும் ஜம்மு போலிசார் சோனேபட் போலிசாருக்கு அனுப்பியுள்ளனர்.

தகவலின் அடிப்படையில் சோனேபட் போலிசார் கன்னவுர்-முர்தல் இடையே தடுப்பு அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் ஞாயிற்றுகிழமை இரவு கண்காணிப்பு பணியின் போது ஒரு பெண் மற்றும் இரண்டு இளைஞர்களை போலிசார் தடுத்து நிறுத்தினர். அவர்கள் மூவரும் ரவி அவனது மனைவி வரீந்திர தீப் கவுர் மற்றும் அவனது கூட்டாளி கனாப் அரோரா என அடையாளம் காணப்பட்டது. பின்னர் அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து போலி பாஸ்போர்ட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்ட தகவல் ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் டெல்லி தலைமையகத்திற்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், ஜம்மு காஷ்மீரின் டிஎஸ்பி சந்தீப் பட் தனது குழுவுடன் சோனேபட் விரைந்தார். பின்னர் கைது செய்யப்பட்ட மூவரும் முர்தல் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டனர்.

பின்னர் 3 பேரும் ஜம்மு காஷ்மீருக்கு கொண்டு செல்லப்பட்டனர். காவல்துறையினர் கூறுகையில், நவம்பர் 2021 அன்று ஜம்மு காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் முகமது பர்வேஸ் மற்றும் உமர் ஃபருக் என அடையாளம் காணப்பட்ட நிலையில் அவர்களிடம் இருந்து 43 லட்சத்தை போலிசார் பறிமுதல் செய்தனர்.

பயங்கரவாதிகளுக்கு பண உதவி செய்யும் இந்த இருவரும் பயங்கரவாதி ஆஷிக்கிடம் வேலை பார்த்து வந்துள்ளனர். அதே நவம்பர் மாதம் பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸில் அடையாளம் தெரியாத நபர் மூலம் இந்த பணம் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. போலிசார் நடத்திய விசாரணையில் அந்த அடையாளம் தெரியாத நபர்கள் ரவி அவனது மனைவி வரேந்திர தீப் கவுர் என அடையாளம் காணப்பட்டது. மூன்று பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு ஜம்முவுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published.