ஒடிசாவில் மாவோயிஸ்டுகள் நடத்திய திடீர் தாக்குதலில் 3 CRPF வீரர்கள் வீரமரணம்..
சத்தீஸ்கர்-ஒடிசா எல்லையில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் மூன்று CRPF வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் நான்கு வீரர்கள் காயமடைந்துள்ளதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.
நுவாபாடா மாவட்டத்தின் பெடன் பிளாக்கில் உள்ள படதாரா ரிசர்வ் வனப்பகுதியில் 19வது பட்டாலியன் CRPF வீரர்கள் ஒரு முகாமில் இருந்து மற்றொரு முகாமுக்கு சென்று கொண்டிருந்தபோது இன்று பிற்பகல் 2.30 மணி அளவில் CRPF வீரர்கள் மீது நக்சல்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
உடனடியாக இராணுவம் பதிலடி கொடுத்த நிலையில் இறந்த வீரர்களின் ஏகே 47 துப்பாக்கிகளை எடுத்து கொண்டு நக்சல்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். முதல்கட்ட அறிக்கையில் வாகனத்தில் ஏழு CRPF வீரர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இறந்தவர்களில் CRPF கான்ஸ்டபிள் தர்மேந்திர குமார் சிங் மற்றும் இரண்டு உதவி சப்-இன்ஸ்பெக்டர் சிசு பால் சிங் மற்றும் ஷிவ் லால் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதற்கிடையில் நுவாபாடா எஸ்பி மற்றும் CRPF மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அப்பகுதியில் மீட்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சிறப்பு செயல்பாட்டு குழு மற்றும் CRPF ன் பல குழுக்கள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். காயமடைந்த வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒடிசா காவல்துறை டிஜிபி சுனில் பன்சால் கூறுகையில், வீரர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். அப்பகுதியில் மாவோயிஸ்டுகளை கண்டுபிடிக்கும் நடவடிக்கை தொடரும் எனவும், வீரர்களின் உன்னத தியாகம் வீண் போகாது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.