இந்த 2 நிபந்தனைகளையும் ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி- மநீம துணைத் தலைவர் பேட்டி


சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் அவசர நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கமல்ஹாசன் போட்டியிடும் தொகுதியை இறுதி செய்வது, தேர்தல் அறிக்கை தயார் செய்யும் குழு அமைக்கவும், தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு அமைப்பது குறித்தும் மற்றும் கட்சி வளர்ச்சி குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

Image

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் மாநில துணைத் தலைவர் மவுரியா, “எந்த கூட்டணியும் எங்களுடைய இரண்டு நிபந்தனைகளின் அடிப்படையில்தான் அமைய முடியும். தமிழ்நாட்டின் வளர்ச்சியையும் தமிழக மக்களின் நலன்களிலும் எந்த சமரசமும் அனுமதிக்கப்பட மாட்டாது. மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசனின் சிந்தனைகளோடும், கொள்கைகளோடும் ஒத்துப் போகிறவர்களுடன் மட்டுமே கூட்டணி சாத்தியம். இந்த இரண்டு நிபந்தனைகளோடும் ஒத்துவராவிட்டால் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட தயங்க மாட்டோம்.

கூட்டணி பேச்சுவார்த்தைக்காக குழு ஒன்றை அமைக்க உள்ளோம்.  யாருடன் கூட்டணி? எத்தனை தொகுதியில் போட்டியிடுவோம் என்பதையெல்லாம் அந்த குழு தான் முடிவு எடுக்கும்.வருகிற ஜனவரி 25ஆம் தேதி தேசிய வாக்காளர் தினத்தன்று வீடியோ மூலம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தவுள்ளோம். அதன் அடிப்படையில் இந்தாண்டு  மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுப்பினர்கள் தேசிய வாக்காளர் தினத்தன்று களத்திலும், சமூகவலைதளத்திலும்  வாக்களிப்பதன் அவசியம் குறித்து பணிகளை மேற்கொள்வார்கள். மேலும் மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு கூட்டம் பிப்ரவரி மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது” என்றார்.

 


Leave a Comment