மோதலை அடுத்து சீன, பாகிஸ்தான் எல்லையில் 20,000 கோடி மதிப்பில் 3,500 கிமீ சாலை அமைப்பு..

சீனாவின் எல்லை பகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் 15,477 கோடி ரூபாய் செலவில் 2,088 கிலோமீட்டர் சாலை அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பட் மாநிலங்களவையில் திங்கள் கிழமை தெரிவித்துள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளாக லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டு கோட்டில் (LAC) இந்திய மற்றும் சீன வீரர்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதால் லடாக்கில் இருந்து அருணாச்சல் பிரதேசம் வரை LAC வழியாக சாலைகள், விமான நிலையங்கள் மற்றம் ஹெலிபேடுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும் இதுதவிர பாகிஸ்தான் உடனான எல்லை கட்டுப்பாட்டு கோடு (LOC) உள்ளிட்ட பகுதிகளிலும் சாலைகள் விரைவாக போடப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் எல்லை பகுதிகளில் 20,767 கோடி மதிப்பில் கிட்டத்தட்ட 3,595 கிலோமீட்டர் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

திங்கள்கிழமை மாநிலங்களவையில் பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பட் கூறுகையில், கடந்த 5 ஆண்டுகளில் சீன எல்லையில் சுமார் 15,477 கோடி ரூபாய் செலவில் 2,088 கிலோமீட்டர் சாலை அமைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் உடனான எல்லையில் சுமார் 4,242 கோடி ரூபாய் செலவில் 1,336 கிலோமீட்டர் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இதேபோல் மியான்மர் உடனான எல்லையில் சுமார் 882 கோடி ரூபாய் செலவில் 151 கிலோமீட்டர் சாலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வங்காளதேசம் உடனான எல்லையில் 165 கோடி ரூபாய் செலவில் 19.25 கிலோமீட்டர் சாலை அமைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.

மேலும் சின எல்லையான LAC யில் விமானநிலையங்கள், ஹெலிபேடுகள் போன்றவையும் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த விமானநிலையங்கள் போக்குவரத்து விமானங்கள் தரையிறங்குவது மட்டுமல்லாமல் போர் காலங்களில் போர் விமானங்கள் தறையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய விமானதளங்கள் மூலம் இந்தியா கூடுதல் துருப்புகள், இலகுரக மற்றும் கனரக ஆயுதங்கள், உணவு மற்றும் உடைகள் போன்றவற்றை விரைவாக எல்லைக்கு அனுப்ப முடியும். சாலைகளை பொறுத்தவரை 77 சாலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பெரும்பாலானவை LAC உடன் நிலப்பகுதியை இணைக்கின்றன என அமைச்சர் கூறியுள்ளார்.

தர்புக்-ஷாயோக்-தௌலத் பெக் ஓல்டி சாலை மற்றும் ரோஹ்தாங் பாஸின் அடல் சுரங்கப்பாதை ஏற்கனவே முடிக்கப்பட்ட முக்கிய சாலைகள் ஆகும். மேலும் முழு நாட்டையும் லடாக் உடன் இணைக்கும் ஜோஜிலா சுரங்கப்பாதைக்கான கட்டுமானப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தற்போது பனிப்பொழிவு காரணமாக சிறிது தாமதம் ஆகியுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.