விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சியிடம் இருந்து 18,000 கோடி பறிமுதல்.? உச்சநீதிமன்றத்தில் தகவல்..
விஜய் மல்லையா, நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி ஆகியோரிடம் இருந்து 18,000 கோடி வங்கிகளுக்கு திரும்பியுள்ளதாக மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் தலைமையிலான நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, பணமோசடி தடுப்பு சட்டத்தின் (PMLA) மனுக்களை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவின்படி, விஜய் மல்லையா, மெகுல் சோக்சி, நீரவ் மோடி உள்ளிட்டோர் மீதான பணமோசடி வழக்குகளில் இதுவரை 18,000 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக துஷார் மேத்தா தெரிவித்தார்.
உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பணமோசடி தடுப்பு சட்டத்தின் குற்றங்களின் மொத்த தொகை சுமார் 67,000 கோடி என நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் தெரிவித்தார். இன்றுவரை 4,700 வழக்குகள் அமலாக்க இயக்குநரகத்தால் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், கடந்த 5 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 111ல் இருந்து 981 ஆக உயர்ந்து வருவதாகவும் மேத்தா தெரிவித்துள்ளார்.
பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் 2, 086 வழக்குகள் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மற்ற நாடுகளில் பதிவான வழக்குகள், இங்கிலாந்து 7,900, அமெரிக்கா 1,532, சீனா 4,691, ஆஸ்திரியா 1,036, ஹாங்காங் 1,823, பெல்ஜியம் 1,862 மற்றும் ரஷ்யா 2,764 வழக்குகள் பதிவாகியுள்ளன.
9,000 கோடி மோசடி வழக்கில் விஜய் மல்லையா லண்டனுக்கு தப்பி சென்றார். ஜூலை 2021 ஆம் ஆண்டு லண்டன் நீதிமன்றம் விஜய் மல்லையாவை திவாலானதாக அறிவித்தது. அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. சட்டப்பூர்வ செயல்முறை முடிந்த நிலையில் அவர் ஜாமீனில் இருக்கிறார். தற்போது மல்லையா இங்கிலாந்தில் அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நீரவ் மோடியை இந்தியாவிற்கு நாடு கடத்துவதற்கு பிரிட்டிஷ் உள்துறை செயலர் ஒப்புதல் அளித்தார். நீரவ் மோடி பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் 2 பில்லியன் அமெரிக்க டாலர் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மெஹுல் சோக்ஸி ஆன்டிகுவா மற்றும் பர்புடாவில் வசித்து வருகிறார். அங்கு அவர் குடியுரிமையை பெற்றுள்ளார். அவர்கள் மூவரையும் இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான நடைமுறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.