நொய்டாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த ஒரு பெண் உட்பட 18 சீனர்கள் கைது..

ஜூலை 13 புதன்கிழமை அன்று கிரேட்டர் நொய்டாவில் பப் மற்றும் பார் நடத்தி வந்த ஜான்சன் (27) என்ற சீன நபரை உத்திரபிரதேச சிறப்பு அதிரடி படை கைது செய்துள்ளது. ஜான்சன் உடன் சேர்த்து அவரது 3 நண்பர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றொரு சம்பவத்தில் ஒரு பெண் உட்பட 14 சீனர்களை உத்திரபிரதேச போலிசார் கைது செய்துள்ளனர்.

உத்திரபிரதேச சிறப்பு அதிரடிபடையின் நொய்டா பிரிவால் ஜான்சன் உட்பட 4 சீனர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கி இருந்தனர். இவர்களது பாஸ்போர்ட் 2020 ஆம் ஆண்டுடன் காலாவதியாகி விட்டதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த 4 பேரும் மற்றொரு சீன நாட்டவரான ஹூ பெய் உடன் தங்கி இருந்தாக கூறப்படுகிறது. ஹு விசா காலாவதியான பிறகும் கிரேட்டர் நொய்டாவிற்கு வெளியே சட்டவிரோதமாக கிளப் மற்றும் விருந்தினர் மாளிகையை நடத்தி வந்துள்ளார். கைது செய்யப்பட்ட நான்கு பேர் ஜான்சன், ரியான், ஜெங் ஹாயோ மற்றும் ஜெங் டே என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஹூ பெய் நடத்தி வந்த விருந்தினர் மாளிகை ரவி நட்வர்லால்க்கு சொந்தமானது, இதில் ஜான்சன் பங்குதாரராக இருந்துள்ளார். நேபாள எல்லையில் முன்பு விசா இல்லாமல் ஒரே விருந்தினர் மாளிகையில் 18 நாட்கள் தங்கியிருந்த இரண்டு சீனர்கள் கைது செய்யப்பட்டதில் இருந்து ஜான்சன் தலைமறைவாக இருந்துள்ளார்.

ஜான்சன் தனது வடகிழக்கு இந்தியாவை சேர்ந்த காதலியுடன் விருந்தினர் மாளிகையில் தங்கி வந்துள்ளார். தனது காதலி மூலம் ஜான்சன் வங்கி கணக்கு துவங்கி நடத்தி வந்துள்ளார். போலிசார் கூறுகையில், கடந்த மாதம் ஹூ பெய் கைது செய்யப்பட்டதில் இருந்து அவருடன் தொடர்புடையவர்களை தேடி வந்தோம். அவரது சட்டவிரோத கிளப்பில் ஜான்சன் பங்குதாரராக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

நொய்டாவின் கர்பரா கிராமத்தில் உள்ள ஒரு வீட்டை சோதனையிட்டத்தில் அங்கு சீனர்கள் மட்டுமே உள்ள கிளப் என தெரியவந்தது. இந்தியாவில் சட்டவிரோதமாக வசிக்கும் 20 சீன பிரஜைகள் இந்த கிளப்பை பாதுகாப்பான புகலிடமாகவும், கூடும் இடமாகவும் பயன்படுத்தி வந்துள்ளனர். ஹு பெய், ஜான்சன் மற்றும் இந்தியாவை சேர்ந்த ரவி நட்வர்லால் ஆகிய மூவரும் பங்குதாரர் ஆவார்கள்.

மற்றொரு சம்பவத்தில், இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கி இருந்தாக ஒரு பெண் உட்பட 14 சீனர்களை நொய்டா போலிசார் கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் நொய்டாவில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். ஆனால் இவர்களில் விசாக்கள் 2020 ஆம் ஆண்டுடன் காலாவதியாகிவிட்டன.

Leave a Reply

Your email address will not be published.