உ.பி.யில் 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து உடலை புதருக்குள் வீசி சென்ற கொடூரம்
உத்தரபிரதேச மாநிலம், மகாராஜ்கஞ்ச் மாவட்டம், புரந்தர்பூர் பகுதியில் 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். செவ்வாய்க்கிழமை காலை இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. அவரது வீட்டிலிருந்து 500 மீட்டர் தொலைவில் அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. 3 பெண் குழந்தைகளில் இவர் மூத்தவர் ஆவார்.
திங்களன்று மதியம் அந்த சிறுமியும் அவரது தாயாரும் அருகிலுள்ள காட்டில் புல் வெட்டச் சென்றுள்ளனர். வெட்டப்பட்ட புற்களை எடுத்துச் செல்ல ஒரு மிதிவண்டியை எடுத்து வருமாறு குழந்தையிடம் கூறியுள்ளார். மாலை ஒரு மிதிவண்டியுடன் அந்த பெண் வீட்டை விட்டு சென்றுள்ளார். ஆனால் திரும்பி வரவில்லை.
இதனால் அவரது குடும்பத்தினரும், கிராமத்தினரும் சிறுமியை தேடியுள்ளனர். சிறுமியின் சைக்கிள் மற்றும் செருப்புகளை கண்டுபிடித்தபோது, சிறுமியை காணவில்லை. உள்ளூர் போலீசார் உஷார் படுத்தப்பட்டு தேடிய போதும் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. செவ்வாய்க்கிழமை காலை தான் உள்ளூர்வாசிகள் சிறுமியின் சடலத்தை கண்டு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து மோப்ப நாயுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலிசார் விசாரணை நடத்தினர்.
12 வயது சிறுமியின் உடலை கைப்பற்றிய போலிசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீஸ் கண்காணிப்பாளர் பிரதீப் குப்தா கூறுகையில், “12 வயது சிறுமியின் உடல், புரந்தர்பூர் பகுதியில் உள்ள வனப்பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை கண்டுபிடிக்கப்பட்டது. சிறுமியின் உடலில் காயம் இருந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். இது ஒரு கொடிய குற்றம், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் அடிப்படையில், POCSO சட்டத்தின் பிரிவுகள் 5 மற்றும் 6, இந்திய தண்டனைச் சட்டம் 363, 376, 302 மற்றும் 201 ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.