குஜராத் எல்லையில் 11 பாகிஸ்தான் படகுகள்.. களத்தில் இறங்கிய BSF க்ரோக்கடைல் கமாண்டோஸ்..
இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் குஜராத்தின் புஜில் உள்ள ஹராமி நாலா என்ற ஆற்று பகுதியில் 11 பாகிஸ்தான் மீன்பிடி படகுகளை கைப்பற்றியுள்ளதாக எல்லை பாதுகாப்பு படை (BSF) தெரிவித்துள்ளது. மீனவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாக BSF தெரிவித்துள்ளது.
BSF வெளியிட்டுள்ள அறிக்கையில், புதன் கிழமை ட்ரோன்கள் மூலம் ஹராமி நாலா பகுதியில் வழக்கமான வான்வழி கண்காணிப்பின் போது எட்டு பாகிஸ்தான் மீன்பிடி படகுகள் கண்டுபிடிக்கப்பட்டது. ஊடுருவல்காரர்கள் படகில் இருந்து குதித்து தப்பினர். DIG BSF பூஜ், உடனடியாக அப்பகுதியை சுற்றி சுமார் 300 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
வியாழன் அன்று மேலும் மூன்று பாகிஸ்தான் மீன்பிடி படகுகள் கண்டுபிடிக்கப்பட்டன. தேடுதல் வேட்டை 30 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து வரும் நிலையில் அப்பகுதி முழுவதும் BSF கண்காணிப்பின் வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்த தேடுதல் வேட்டையின் தொடர்ச்சியாக மறைந்திருக்கும் பாகிஸ்தான் மீனவர்களை பிடிப்பதற்கு “க்ரீக் க்ரோக்கடைல் கமாண்டோஸ்” படையினர் இந்திய விமானப்படையால் புஜின் ஆற்றில் இறக்கி விடப்பட்டுள்ளனர். இதனால் பாகிஸ்தான் மீனவர்கள் தப்பிப்பதற்கு வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
க்ரீக் க்ரோக்கடைல் கமாண்டோஸ் பிரிவானது BSFன் சிறப்பு பிரிவின் ஒரு பிரிவாகும். இது ரான் ஆஃப் கட்ச்சின் க்ரீக் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது. புஜின் பகுதியில் உள்ள சதுப்பு நிலம், தீவிர சதுப்பு நிலம் மற்றும் நீர் அலைகள் துருப்புகளின் தேடுதல் பணியில் தொய்வை ஏற்படுத்தியுள்ளன. அதிகாலை தலைநகர் காந்திநகரில் இருந்து கட்ச சென்றடைந்த ஜி.எஸ்.மாலிக், தேடுதல் வேட்டையை நேரில் கண்காணித்து வருகிறார்.