ஒரே ஆண்டில் 10,000 கோடி மதிப்பிலான ஆப்பிள் ஐபோன்கள் ஏற்றுமதி செய்து சாதனை..!
இந்தியாவில் இந்த நிதியாண்டில் 10,000 கோடி மதிப்பிலான ஆப்பிள் ஐபோன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. உற்பத்தியை தொடங்கிய முதல் வருடத்திலேயே இந்த இலக்கை அந்த நிறுவனம் அடைந்துள்ளதாக பைனான்சியல் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
ஆப்பிள் போன்கள் அதன் ஒப்பந்த உற்பத்தியாளர்களால் தயாரிக்கப்படுகின்றன. PLI திட்டத்தின கீழ் தேர்வு செய்யப்பட்ட விஸ்ட்ரான் மற்றம் பாக்ஸ்கான் ஆகிய நிறுவனங்கள் ஆப்பிள் போன்களை தயாரித்து வருகின்றன. இதில் விஸ்ட்ரான் கர்நாடகாவிலும், பாக்ஸ்கான் தமிழ்நாட்டிலும் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தமிழகத்தில் செயல்பட்டு வரும் பாக்ஸ்கான் நிறுவனத்தில் உணவில் கலப்படம் இருப்பதாக கூறி சாலை மறியல் நடைபெற்றது. இதனால் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதம் இந்த நிறுவனம் மூடப்பட்டது. இதனால் உற்பத்தியை விஸ்ட்ரான் நிறுவனம் அதிகரித்தது.
மூன்றாவதாக பெகாட்ரான் என்ற நிறுவனமும் ஒப்பந்த அடிப்படையில் ஆப்பிள் போன்களை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனமும் PLI திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் தனது மொத்த தேவையில் 75-80 சதவீதம் உள்நாட்டு உற்பத்தி மூலம் பூர்த்தி செய்துள்ளது.
ஒரு வருடத்திற்கு முன்பு இது 10-15 சதவீதமாக இருந்தது. அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட ஐபோன் மாடல்களில் SE 2020 உள்ளது. இது விஸ்ட்ரான் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. இதுதவிர ஐபோன் 11 மற்றும் 12 ஆகியவை பாக்ஸ்கான் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகின்றன. பாக்ஸ்கான் விரைவில் ஐபோன் 13 மாடலை இந்தியாவில் உற்பத்தி செய்யும் என கூறப்படுகிறது.
Also Read: சீனாவிடம் மேலும் 1.5 பில்லியன் டாலர் கடன் கேட்கும் இலங்கை..?
PLI ஊக்கத்தொகை திட்டம் ஏப்ரல் 2020 ஆம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான அரசு அறிவித்தது. ஆனால் அப்போது கொரோனா பரவல் ஆரம்பித்ததால், ஐந்து ஆண்டுகளாக அறிவிக்கப்பட்ட திட்டம் ஆறு ஆண்டுகளாக அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு முதல் PLI திட்டத்தின் கீழ் நிறுவனங்கள் உற்பத்தியை ஆரம்பித்தன.
முதல் வருடத்திலேயே 10,000 கோடி மதிப்பிலான ஐபோன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. இது இனி வரும் காலங்களில் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. உலகளாவிய உற்பத்தி தளத்தை இந்தியாவுக்கு மாற்றுதல், போன்களுக்கான ஏற்றுமதி மையமாக இந்தியாவை உருவாக்குதல் மற்றும் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்தல் போன்ற PLI திட்டத்தின் கீழ் அரசு நிர்ணயித்த இலக்கை ஆப்பிள் அதன் முதல் ஆண்டு உற்பத்தியில் அடைந்துள்ளது.
PLI திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட வெளிநாட்டு நிறுவனங்கள், சாம்சாங், பாக்ஸ்கான், ரைசிங் ஸ்டார், விஸ்ட்ரான் மற்றும் பெகாட்ரான் ஆகிய நிறுவனங்களும், உள்நாட்டில் லாவா, மைரோமேக்ஸ், பேட்ஜெட் எலக்ட்ரானிக்ஸ், யுடிஎல் நியோலின்க்ஸ் மற்றும் ஆப்டிமஸ் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள் ஆகும்.