கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் 1.25 லட்சம் கோடிக்கு தீபாவளி விற்பனை.. சீனாவுக்கு 50,000 கோடிக்கு நஷ்டம்..?
இந்தியாவில் இந்த ஆண்டு தீபாவளி விற்பனை 1.25 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத உயர்வாகும். இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பு (CAIT) கூறுகையில், கொரோனா தொற்றால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இந்த நிலையில் தீபாவளி விற்பனை 1.25 லட்சம் கோடியை தாண்டியிருப்பது மீண்டும் பணப்புழக்கம் அதிகரித்து இருப்பதையே காட்டுவதாக CAIT கூறியுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு 60,000 கோடிக்கும், 2020 ஆம் ஆண்டு தீபாவளி விற்பனை 72,000 கோடிக்கும் விற்பனை ஆகி இருந்த நிலையில் இந்த ஆண்டு தீபாவளி விற்பனை 1,25 லட்சம் கோடியை கடந்து அபரிவிதமாக வளர்ச்சி அடைந்துள்ளது.
இது இந்திய வணிகர்களுக்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளித்துள்ளது. இதனை தொடர்ந்து நவம்பர் 14 முதல் திருமண சீசன் ஆரம்பமாக உள்ளதால் வணிகர்கள் அதற்கு தயாராகி வருகின்றனர். தீபாவளி விற்பனையானது வணிகர்களிடையே மிகப்பெரிய தீப்பொறியை உருவாக்கி உள்ளதாக CAIT தெரிவித்துள்ளது.
CIAT பொதுச்செயலாளர் பிரவீன் கண்டேல்வால் கூறுகையில், கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையில் 1.25 லட்சம் கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது. இது மிகப்பெரிய வளர்ச்சி ஆகும். டெல்லியில் மட்டும் 25,000 கோடிக்கு விற்பனை ஆகி உள்ளதாக கண்டேல்வால் கூறினார்.
Also Read: அக்டோபரில் GST வரி வருவாய் 1.30 லட்சம் கோடியை கடந்து சாதனை.. வளர்ச்சியில் பின்னோக்கி தமிழகம்..
மேலும் கண்டேல்வால் கூறுகையில், இந்த ஆண்டு சீன பொருட்கள் விற்பனை செய்யப்படவில்லை. இதனால் இந்திய பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது. இந்திய வணிகர்கள் யாரும் சீன நிறுவனங்களுக்கு ஆர்டர் கொடுக்கவில்லை. இதனால் சீனாவுக்கு இந்த ஆண்டு 50,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.
இந்த தீபாவளி பண்டிகையில் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் ஆகியவை 9,000 கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது. மேலும் பேகேஜிங் பொருட்களின் வர்த்தகம் 15,000 கோடி அளவிற்கு உயர்ந்துள்ளதாக CAIT அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: சீனாவுக்கு எதிராக சோலார் பேட்டரி சந்தையில் களமிறங்க உள்ள ரிலையன்ஸ் நிறுவனம்..
இந்த ஆண்டு பாரம்பரிய பொருட்களான மண் விளக்குகள், மண் அலங்கார பொருட்கள், பொம்மைகள், மெழுகுவர்த்திகள், காகித விளக்குகள், கைவினை பொருட்கள் ஆகியவை கணிசமான அளவுக்கு விற்பனை ஆகி உள்ளன. மேலும் LED விளக்குகள், இனிப்புகள், உலர் பழங்கள், வீட்டு அலங்கார பொருட்கள் ஆகியவை அதிக அளவில் விற்பனை ஆகி உள்ளதாக CAIT தெரிவித்துள்ளது.
Also Read: இந்த நிதியாண்டு இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும்: உலக வங்கி